அஜீத் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு, சிம்பு நடித்த பத்து தல ஆகிய படங்களை அனுமதியை மீறி கூடுதலாக 15 காட்சிகள் திரையிட்டதற்காக ரோகினி மல்டிப்ளெக்ஸ் திரையரங்கிற்கு ரூ. 24,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து ரோகினி திரையரங்க நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சேஷசாயி, சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி மூவி பார்க்கில் உள்ள ரோகினி, ராகினி, ரூபிணி, ருக்மணி, ரக்சினி மற்றும் ரந்தினி ஆகிய அனைத்து திரையரங்குகளுக்கும் விதிக்கப்பட்ட அபராதம் செல்லும் என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

காலை 9 மணி முதல் பின்னிரவு 1:30 மணி வரை மட்டுமே திரையரங்குகளை திறந்துவைத்து படம்காட்ட வேண்டும் என்றும் வழக்கமான நான்கு காட்சிகளுடன் கூடுதலாக ஒருகாட்சி மட்டுமே, அனுமதிக்கப்பட்ட நாட்களில் திரையிட சிறப்புக்காட்சிகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டது.

இருந்தபோதும் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் காலை 1 மணி, காலை 4 மணி மற்றும் காலை 8 மணி என்று கூடுதல் காட்சிகள் இடம்பெற்றதோடு உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள் பீரிட்டு கொண்டாடினர்.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை 24 மணி நேரம் திறந்திருக்க தமிழக அரசு வழங்கியிருக்கும் அனுமதி என்பது திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்களின் பணிச்சூழல் பாதுகாப்பு தொடர்புடையது ஆனால் திரையரங்கில் காட்சி நேரங்கள் தமிழ்நாடு சினிமா (விதிமுறைகள்) சட்டம், 1955 துடன் தொடர்புடையது என்று அரசு வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதாடினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜனவரி 11, 2023 அன்று உள்துறை (சினிமா) துறையால் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தியேட்டர்களில் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகளை மட்டுமே இயக்க முடியும். அன்றைய தினம் முதல் காட்சியை காலை 9 மணிக்குப் பிறகு தொடங்கி, 1.30 மணிக்குள் கடைசி காட்சியை முடிக்க வேண்டும், என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் ரோகினி திரையரங்க நிர்வாகம் விதிகளை மீறி செயல்பட்டதால் விதிக்கப்பட்ட அபராதம் செல்லுபடியாகும் என்று கூறிய நீதிபதி ரோகினி திரையரங்கம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.