சென்னை: பணி நிறைவு பெறாத 12 மீட்டர் உயரம் வரை உள்ள 3 குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் பரப்பளவிலான வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக வீடு கட்டுவோர் அல்லது தொழிற்சாலைகள் கட்டுவோர் மின் இணைப்பு பெற பணி நிறைவு சான்றிதழ் பெறுவது அவசியம். அதாவது, பொது கட்டிட விதிகள் தொடர்பாக புதிய சட்டம் 2019-ல் அமலுக்கு வந்தது.

பணி நிறைவு சான்று: அதன்படி, 10 ஆயிரம் சதுரஅடி வரையிலான குடியிருப்பு கட்டிடங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அனுமதி பெறுவோர், விதிமுறைகளுக்கு உட்பட்டு, கட்டிடங்களை கட்டியுள்ளனரா என்பதை உறுதிசெய்ய பணி நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயம் ஆகும்.

இந்தச் சட்டப்படி 3 வீடுகளுக்கு மேற்பட்ட குடியிருப்புகளை கட்டுவோர், கட்டுமான பணி நிறைவு சான்று பெற வேண்டும். இந்தச் சான்று பெற்ற பிறகே, மின்சார இணைப்பு வழங்கப்படும். இதற்கிடையே, பல இடங்களில் பணி நிறைவு சான்று வாங்காமல், மின் இணைப்புகள் பெறப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மின் இணைப்பு விதிகளில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

அதன்படி வீடுகளைக் கட்டினாலும், பணி நிறைவு சான்று கோரி உள்ளாட்சியில் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், அந்த விண்ணப்பங்கள் மீது அதிகாரிகள் உரிய நேரத்தில் முடிவு எடுக்காமல் கிடப்பில் போடுவதாகவும், இதனால் கட்டுமானப் பணிகள் முடிந்தும் வீடுகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

நகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை: இந்நிலையில், பணி நிறைவு சான்று பெறாத 12 மீட்டர் உயரம் வரை உள்ள 3 குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் பரப்பளவிலான வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்கள் மின் இணைப்பு பெறலாம் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மின்வாரியத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த சுற்றறிக்கையைப் பின்பற்றி, மின்இணைப்பு வழங்குமாறு அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கும் மின்வாரியம் உத்தர விட்டுள்ளது