சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது  60-ஆக உயர்த்தப்படுவதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். இதனால்,  இளைஞர்களின் அரசு வேலை கனவாகும் சூழல் உருவாகி உள்ளது.

தமிழக சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநில அரசின் இடைக்கால பட்ஜெட் 23ந்தேதி தாக்கல் செய்த நிலையில், இன்றுமுதல் பட்ஜெட் குறித்து விவாதங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை வழங்கிய அதிமுக அரசு, தற்போது மேலும் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக,  அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59-ல் இருந்து 60-ஆக உயர்த்தப்படுவதாக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி அறிவித்துஉள்ளார்.

ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தை காரணம் காட்டி, கடந்த வருடம் (2020) மே மாதம் 14-ம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு   58-ல் இருந்து 59-ஆக கடந்த மே மாதம் 14-ம் தேதி உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வருடம் உயர்த்தப்பட்டு உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய நிலையில், தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் சூழலில், அவர்களின் அரசு வேலை குறித்த ஆசையானது வெறும் கனவாகி போகும்நிலை உருவாகி உள்ளது.

தமிழகஅரசு, தேர்தலை கருத்தில்கொண்டு ஓய்வுபெறும் வயதை அதிகரித்துள்ளது,  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இளைஞர் சமுதாயத்தினர் மத்தியில்  கடும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது.