சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முழுமையான மற்றும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (18ந்தேதி) தொடங்கி 24ந்தேதி வரை நடைபெற உள்ளது. முதல்நாள் அமர்வில் மாநில நிதிநிலை அறிக்கையை  தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றன.  இதையடுத்து ஒத்தி வைக்கப்பட்ட சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடுகிறது.

இன்றைய அமர்வில்,  2022-23- ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் துறைக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண்துறைக்கென முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று 2வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,21, 22, 23 ஆகிய மூன்று நாட்களும் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும்.மார்ச் 24 ஆம் தேதி நிதியமைச்சர், வேளாண்துறை அமைச்சர் ஆகியோர் பதிலுரை அளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.