சேலம்: சேலம் முன்னாள் எம்பி தேவதாஸ், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் அனுப்பி உள்ளார். கட்சி தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்ட  காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் எம்.பி.யுமான சேலம் தேவதாஸ்  தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக  இருந்து வருகிறார். இவர் திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த, தேவதாஸ், எனது தந்தை ராமசாமி உடையார் 60ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியை வளர்த்தார். நான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் இருக்கிறேன். சேலம் தொகுதியின் த.மா.கா. எம்பியாக பணியாற்றியுள்ளேன். ஆனால் காங்கிரஸ் கட்சியில் எனக்கு மதிப்பு, மரியாதை இல்லை. தமிழக காங்கிரஸ் கட்சியில் தலைமை சரியில்லாத காரணத்தினால் நாளுக்கு நாள் காங்கிரஸ் கட்சி அழிந்து வருகிறது காங்கிரஸ் அரசில் 40 வருடங்களுக்கு மேல் உள்ள எவருக்கும் உரிய அங்கீகாரம் இல்லை

சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கமிட்டி உறுப்பினராக கூட என்னை நியமிக்கவில்லை. காங்கிரசில் யார், யாருக்கோ பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் காமராஜரோடு இருந்து, கட்சியை வளர்த்த ராமசாமி உடையார் மகனான எனக்கு ஒரு பொறுப்பும் காடுக்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசியவர்,  நான் எந்த கோஷ்டியிலும் இல்லை என்பதால் பொறுப்பு வழங்கவில்லையா? என்று கேள்வி எழுப்பியவர், நான் வகித்து வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என்று கூறியதுடன்இது தொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, மாநில தலைவர் அழகிரி ஆகியோருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டதாக கூறினார்.

நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதால் பாஜகவில் சேருவேன் என நினைக்க வேண்டாம் என்று கூறியதுடன், தான் தற்போது வெளிநாடு செல்கிறேன். திரும்பி வந்ததும் அடுத்த கட்ட முடிவுகளை எடுப்பேன் என்று தெரிவித்தார்.

முன்னாள் எம்.பி. தேவதாஸ் பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது தந்தை ராமசாமி, காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவர் ஆவார். கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சேலத்தில் போட்டியிட்டு தேவதாஸ் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானது. மீண்டும் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் உருவான போதிலும், அவர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலேயே நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.