சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் விவகாரத்தில் இழுபறி நீடிக்கும் நிலையில்,  நிர்வாகிகளுடன் நாளை கருத்துக் கேட்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்  கட்சி.  தமிழக மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நாளை கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகளிடையே கூட்டணி, தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்தலில் திமுக அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டு உள்ளதால், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்து கொடுக்க முயற்சித்து வருகிறது. இதனால், திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே அதிருப்தி நிலவி வருகிறது.
இதற்கிடையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுவது குறித்து 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 30க்கும் அதிகமான இடங்களை கேட்கும் நிலையில், திமுகவே அதிகபட்சமாக 12 முதல் 15 இங்களை மட்டுமே வழங்க முடியும் என கூறி வருகிறது.  குறைந்த அளவிலான  இடங்களையே ஒதுக்கும் விஷயத்தில்  திமுக பிடிவாதமாக இருப்பதால், இரு கட்சிகளுக்கும்  இடையே உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது, அவர்கள் கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக்கொள்வதா என்பது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி  நாளை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துகிறது.
காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில், நாளை . காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த  ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைமை சார்பில் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் அளிக்கும் கருத்துகளைக் கேட்டு திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து முடிவு செய்யப்படலாம் என்று தெரிகிறது.  மேலும, தேர்தல் பிரசார வியூகம், தேர்தல் அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் வீரப்ப மொய்லி, பள்ளம் ராஜூ  உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்துகொள்க உள்ளனர்.