சென்னை: ராகுல்காந்தி டெல்லி அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராக அழைப்பு விடுத்த அமலாக்கத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து,  சென்னை உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து  நாடு முழுவதும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. பேரணியுடன் சென்று ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில்  500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி மீது போய் வழக்கு போட்டு மிரட்ட நினைக்கும் மோடியின் பாசிச அரசின் போக்கை கண்டித்து அப்போது கோஷம் எழுப்பப்பட்டது. மோடி அரசின் அராஜக நடவடிக்கைக்கு  அஞ்சவும் மாட்டோம். அடிபணியவும் மாட்டோம் என்று கண்டன கோஷம் எழுப்பினர்.
அதுபோல புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.