திருவள்ளூர்: எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து, வடகரையில் உள்ள அரசுப் பள்ளியில் ஆய்வுசெய்ததுடன், அங்கு 10ம் வகுப்புக்கு சென்று விவரங்களை கேட்டறிந்ததுடன், அந்த மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியை எடுத்த பாடத்தை கவனித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை இன்று தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடல் என்று கூறினார். தொடர்ந்து, பல்வேறு அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை முதலமைச்சரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி,திருவள்ளூர் மாவட்டம் வடகரையில் உள்ள அரசு ஆதிராவிடர் பள்ளிக்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கு ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்று சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா? என முதல்வர் ஆய்வு நடத்தினார். பின்னர்,  10ஆம் வகுப்புக்கு சென்று, அங்குள்ள மாணாக்கர்களுடன் உரையாடியதுடன் மாணவர்களுடன் ஒரே இருக்கையில் அமர்ந்து,  தமிழ் ஆசிரியை நடத்தும் பாடத்தை கவனித்தார். அவருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்பட அதிகாரிகளும் வகுப்புக்குள் இருக்கையில் அமர்ந்து பாடத்தை கவனித்தனர்.

தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.