சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு  ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளராக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமித்து உள்ளது.
இதையடுத்து, முதன்முதலாக தினேஷ் குண்டுராவ் இன்று சென்னை வருகை தந்துள்ளார். இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான  சத்தியமூரத்தி பவன் வரும் வழியில்,  சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மறைந்த பாரத பிரதமர்  ராஜீவ் காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, அவருடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், வாழப்பாடி ராமசுகந்தன், வழக்கறிஞர் முத்தழகன் ஆகியோர்  கலந்துகொண்டனர்.
இந்த சிறப்பு நிகழ்ச்சிகான ஏற்பாட்டை  INRLF சென்னை தெற்கு மாவட்ட தலைவர் திரு செல்வகுமார்  செய்திருந்தார்.

தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்திக்கும் தினேஷ் குண்டுராவ், பிற்பகல்  3 மணிக்கு தமிழக காங்கிரசின் முன்னணி அமைப்புகள் மற்றும் இதர துறைகள் தலைவர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர்கள், சொத்து மீட்பு மற்றும் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் ஆகியோரை சந்திக்கிறார்.

நாளை (25ந்தேதி தேதி)  காலை 11 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரை சந்திக்கிறார்.
நாளை மாலை 3.30 மணியளவில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சந்திக்கிறார்.