சென்னை: உக்ரைன் ரஷியா போர் காரணமாக, உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு உதவியாக, சென்னை எழிலத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, 1070 என்ற அவசர உதவி தொலைபேசி எண்ணும் வெளியிட்டுள்ள தமிழக அரசு, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் சுமார் 5000 தமிழ் மாணவர்களை அழைத்து வருவதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என அறிவித்துள்ளது.

தமிழக அரசு  உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்க அயலகத் தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை மூலம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தற்போது அதற்கென பிரத்யேக உதவி எண்ணாக  1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் உள்பட பல்வேறு உதவிகளை அறிவித்து உள்ளது. மேலும், உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு நாடு திரும்புவதற்கு உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என்று தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, http://nrtamils.tn.gov.in என்ற இணையம் வாயிலாக உதவி கோரலாம் என்று அயலக தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், 044-28515288, 9600023645, 9940256444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் சுமார் 5000 தமிழ் மாணவர்களை அழைத்து வருவதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.