சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 13ந்தேதியுடன் முடிவடைகிறது என சபாநாயகர் அப்பாவு இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட்  கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி  தொடங்கியது. அன்றைய தினம், தமிழக அரசின்  பொது  பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அடுத்து 14ம் தேதி முதன் முறையாக வேளாண்  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  தொடர்ந்து 16ந்தேதி முதல் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, துறை வாரியான விவாதங்களும் நடைபெற உள்ளது. இதனால், சட்டசபை கூட்டத்தொடர் செப்டம்பர் 21ந்தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார்.  தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பட்ஜெட் கூட்டத்தை முன்கூட்டிய வேண்டியது இருப்பதாகவும், அதனால், வரும் 13ந்தேதியுடன் சட்டசபை கூட்டத்தொடர் முடிவடையும் என்று அறிவித்து உள்ளார்.