சென்னை: கொரோனா முடக்கம் வரும் 14ந்தேதி உடன் முடிவடைந்த உடன்  தமிழக சட்டசபை கூட்டம் கூட்டப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதையடுத்து, ஜூலை மாதத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக, முந்தைய அ.தி.மு.க. அரசின் நிதி அமைச்சர் ஓபிஎஸ்  கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி தாக்கல்  இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதையடுத்து புதிய அரசு பதவி ஏற்றதும், முழுமையா மாநில பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதைடுத்து நடைபெற்றுமுடிந்த சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்தது.  இதைத்தொடர்ந்து, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மே 11-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரின்  முதல் நாள் கூட்டத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். 2-வது நாள் சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில் போட்டியின்றி சபாநாயகராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டதால் அன்றைய தினமே சபாநாயகராக அப்பாவு பதவி ஏற்றார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட சட்டமன்ற கட்சி தலைவர்கள் வாழ்த்தி பேசினார்கள். அத்துடன் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், 2021-22ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான  புதிய அரசு அமைந்துள்ளதால் சட்டசபையில் கவர்னர் உரையுடன் சட்டசபை தொடங்கப்பட வேண்டும்.  அதைத்தொடர்ந்து, 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதன் காரணமாக தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய கொரோனா தொற்று தடுப்புக்கான தளர்வுகளுடனான ஊரடைங்கு 14-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதால், அது முடிந்ததும், மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக்காலக்கட்டத்தில்,  சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை கவர்னரை சந்திக்கும் முதல்வர், அதுகுறித்து ஆலோசனை நடத்துவார் என்றும், அதையடுத்து, இந்த மாதத்திற்குள் சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.