சென்னை:
கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து பணியாளர்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்கியுள்ளனர். அது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, ”தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை குறைக்கின்ற வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் பயனாக, தற்பொழுது நோய் தொற்று வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தொடர் நடவடிக்கைகளுக்கு உதவுகின்ற வகையில், இயன்ற அளவிலான நிதி உதவியினை “முதலமைச்சரின் பொது நிவாரண நிதி”-க்கு வழங்கிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர்
வேண்டுகோள் விடுத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசு
ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்ற அலுவலர்கள்
மற்றும் பணியாளர்கள் சார்ந்துள்ள துறைகளின் சார்பில், ஒரு நாள் ஊதியமானது வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து பணியாளர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். ஒருநாள் சம்பள தொகையான ரூ.14.46 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.