திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி நடந்துள்ளது.

திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் பதவியில் உள்ள விஜயகார்த்திகேயன் சமூக வலைத் தளங்களில் மிகவும்  பிரபலமானவர்.  இவருடைய முகநூல் மற்றும் டிவிட்டர் பதிவுகளுக்குப் பல ரசிகர்கள் உள்ளனர்.   இவரது கணக்கைப் பலரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.   கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் முகநூல் மோசடி இவர் பெயரிலும் நடந்துள்ளது.

முகநூலில் பிரபலமாக உள்ளவர் பெயரில் புதிய கணக்கைத் தொடங்கும் அந்த மோசடி பேர்வழி அச்சு அசலாக ஒரிஜினல் போலவே புகைப்படம் மற்றும் பெயர்களை வைத்து மெசஞ்சர் மூலம் கணக்கு வைத்துள்ளவர் நண்பர்களுக்கு பணம் தேவை எனத் தகவல் அனுப்புகின்றனர்.  அதை நம்பி பணம் அனுப்புவோர் ஏமாந்து போகின்றனர்.

அவ்வகையில் விஜயகார்த்திகேயன் பெயரில் ஒரு முகநூல் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.  இந்த போலிக் கணக்கு மூலம் யாரோ ஒருவர் விஜயகார்த்திகேயன் நண்பருக்குத் தொடர்பு கொண்டு தனக்குக் கூகுள் பே மூலம் பணம் அனுப்புமாறு கேட்டுள்ளார்.   இதனால் சந்தேகம் அடைந்த நண்பர் விஜயகார்த்திகேயனுக்கு தகவல் அளித்துள்ளார்.

விஜயகார்த்திகேயன் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததுடன் முகநூல் தளத்துக்கும் இது குறித்து தகவல் அளித்துள்ளார்.   மேலும் தனது பெயரில் யாரும் வந்து பணம் அனுப்பச் சொன்னால் அதை நம்ப வேண்டாம் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.    ஆட்சியரின் பெயரிலேயே மோசடி நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.