govt-school-full
சென்னை:
மிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 38 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்திருப்பதாக சமகல்வி இயக்கத் தலைவர் ஜெயம் கூறினார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதுபற்றிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
சமகல்வி இயக்கத்தின் தலைவர் ஜெயம்  அறிக்கை வெளியிட, மாநில குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ரேவதி பெற்றுக்கொண்டார்.
இதுகுறித்து ஜெயம் கூறியதாவது:
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 155 அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்விலும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலும் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி 3 ஆண்டுகளில் 12 மாவட்டங்களில் 38 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 155 பள்ளிகளில் 111 பள்ளிகளில் 25-க்கும் குறைவாகவும், 36 பள்ளிகளில் 10-க்கும் குறைவாகவும் மாணவர்களின் எண்ணிக்கை இருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், 37 பள்ளிகள் ஓடு மற்றும் கல் நார் கூரையுடன் பதுகாப்பற்ற சூழலில் இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அத்துடன் 25 சதவீத ஆரம்பப் பள்ளிகளில் ஒரு வகுப்பறையும், 36 சதவீத பள்ளிகளில் 2 வகுப்பறைகள் மட்டும் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், 83 சதவீத பள்ளிகளில் 5 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே வகுப்பில் அமர வைக்கப்பட்டு, ஒரே ஆசிரியர் அனைத்துப் பாடங்களை நடத்துவதும் தெரிய வந்துள்ளது. இதுபோல் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் இந்த ஆய்வில் கிடைத்திருக்கின்றன.
எனவே, அரசுப் பள்ளிகளின் தர நிர்ணயம் குறித்து அரசு சமூக தணிக்கை செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகள் மூடப்படுவதும், அருகாமைப் பள்ளிகளுடன் இணைக்கும் திட்டமும் கைவிடப்பட வேண்டும் என்றார் அவர்.
மாநில குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ரேவதி கூறியபோது,
“தமிழகத்தில் எத்தனை அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்ற விவரத்தைத் தருமாறு பல முறை ஆணையம் சார்பில் பள்ளிக் கல்வித் துறையிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பள்ளிகள் எதுவும் மூடப்படவே இல்லை என்ற பதிலையே கொடுத்து வந்தனர்.
இப்போது, சமகல்வி இயக்கம் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது’ என்றார்.