சென்னை:
மிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தேர்வுகள் நடத்துவது குறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. அதில் 60% பேர் தேர்வினை நடத்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் இந்த ஆண்டிற்கான தேர்வுகள் நடத்தப்படாமல் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சூழ்நிலை சரி ஆனதும் கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் இந்த நேரத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது சிரமம் என்பதால் தேர்வுகள் நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது.

அதில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என கல்வியாளர்கள், பெற்றோர்கள் 60 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 12 ஆம் வகுப்பு மதிப்பெண் உயர்கல்வி பயில தேவை என்பதால் பலர் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளனர். இதற்கான அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளை சமர்ப்பிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களிலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.