சென்னை:
ருப்புப் பூஞ்சை சிகிச்சைக்காக தமிழகத்திற்கு 30,000 குப்பிகளை ஒதுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கம் இந்தியாவை நடுநடுங்க வைத்துவிட்டது. சுமார் இரண்டு மாதத்திற்குப்பிறகு கொரோனா தொற்று மெல்லமெல்ல கட்டுக்குள் வர கருப்பு பூஞ்சை என்ற நோய் வேகமாக பரவ ஆரம்பித்தது. தமிழகம் உள்பட பல மாநிலங்கள் இதையும் தொற்று நோயாக அறிவித்து சிகிச்சை அளித்து வருகிறது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 673 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு மருந்து இல்லை.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில் ‘‘தமிழகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,790 மருந்து குப்பிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த 30 ஆயிரம் மருந்து குப்பிகளை உடனே வழங்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளார்.