ரூ.3,523 கோடி மதிப்பில் தாம்பரம் – செங்கல்பட்டு இடையே உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அதிகாரி ஒருவர் கூறுகையில், கிராண்ட் சதர்ன் டிரங்க் (ஜிஎஸ்டி) சாலையின் 94 கிமீ தாம்பரம்-திண்டிவனம் பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) நிறைவடைந்துள்ளது.

தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 27 கிமீ நீளமுள்ள உயர்மட்ட வழித்தடத்தின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் என்று அந்த அதிகாரி தெளிவுபடுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், NHAI இன் கோரிக்கையின் பேரில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கனிம பொருட்களுக்கான மாநில அரசின் வரி வருவாயை ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ள நிலையில், இந்த கட்டுமான பணிக்கான ஜிஎஸ்டி வருவாயில் மாநில அரசின் பங்கை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

MoRTH ன் இந்த கோரிக்கை மீது தமிழக அரசு இன்னும் முடிவை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தமிழக அரசின் முடிவை அடுத்து இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெருங்களத்தூரில் தொடங்கி பரனூர் சுங்கச்சாவடியைத் தாண்டி முடிவடையும் 6 வழிச் சாலையில் கிளாம்பாக்கம், பொத்தேரி (எஸ்.ஆர்.எம். கல்லூரி), மற்றும் மஹிந்திரா சிட்டி ஆகிய மூன்று இடங்களில் உள்ளே நுழையவும் வெளியேறவும் வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளது, இதனால் பகல்பொழுதில் எந்நேரமும் 1.5 லட்சம் வாகனங்கள் செல்லும் இந்த சாலையின் போக்குவரத்தில் 50 சதவீதம் உயரடுக்கு சாலையில் செல்லும் வகையில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்த பகுதியில் விபத்து ஏற்படக்கூடிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ள 12 இடங்களில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தாம்பரம் – திண்டிவனம் இடையிலான 94 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை 8 வழிச் சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது. அதேபோல் இந்த வழித்தடத்தில் உள்ள 20 விபத்துப் பகுதிகளில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாலங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநில அரசின் ஜிஎஸ்டி-யை விட்டுக்கொடுப்பது குறித்த ஒப்புதலுக்காக காத்திருக்கும் மத்திய அரசு மாநில அரசின் ஒப்புதலை அடுத்து தாம்பரம் – செங்கல்பட்டு இடையிலான பறக்கும் சாலை பணியை முதலில் துவங்க இருப்பதாக தெரிவித்த அதிகாரிகள், இந்த திட்டம் எத்தனை ஆண்டுகளில் நிறைவடையும் என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.