டெல்லி: நாடாளுமன்றத்தில் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டதால் இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள், நாளை முதல் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.

கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ராஜ்யசபாவில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அங்குள்ள டிவியை உடைக்க முயன்றதும், அதை தடுத்த சபை காவலர்களை எட்டி உதைத்த அலங்கோலங்களும் நடந்தேறின.  இதையடுத்து, காங்கிரஸ், திரிணாமுல், கம்யூனிஸ்டு, சிவசேனா கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். தற்போது குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதும், சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்கள் இந்த தொடரிலும் பங்கேற்க அனுமதி மறுத்து ராஜ்யசபாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய பாஜக அரசின் இந்த செயலுக்கு  எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்கள் தங்கள் தவறுக்கு மன்னிபு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க முடியாது என்று முரண்டு பிடித்து வருகிறது. இதனால் அவை தொடர்ந்து அமளி துமளிப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய பகுதிக்கு 12 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே என்றும், அது அவையின் முடிவு என்றும் அவைத்தலைவர்  முடிவு அல்ல என்று தெரிவித்தார்.

இந்த நிலையில்,  மாநிலங்களவை  தலைவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெங்கையா  நாயுடுவுக்கு கடிதம் எழுத  இடைநீக்கம் செய்யப் பட்ட எம்.பிக்கள் முடிவு செய்துள்ளனர். மேலும்,  நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு அமர்ந்து நாளை முதல் தர்ணாவில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவின்  அறையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.