புதுடெல்லி:

கணினியை இடைமறித்து கண்காணிக்க 10 அரசு அரசு உளவுத் துறைகளுக்கு  அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 6 வாரங்களுக்குள் பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசுக்கு நோடடீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா தாக்கல் செய்த பொது நலன் வழக்கில் கூறியிருந்ததாவது:

கணினியில் இணையத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர் அல்லது இணைய சேவை வழங்கும் நிறுவனங்களை இடைமறித்து கண்காணிக்க, 10 அரசு உளவுத் துறைகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில், தகவல் தொடர்புத்துறை சட்டத்தின் கீழ் கடந்த டிசம்பர் 20-ம் தேதி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் தவறு இழைப்பவர்கள் பற்றி உறுதி செய்யப்பட்டால், அபராதத்துடன் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இத்தகைய உத்தரவு போலீஸ் ராஜ்யத்தை ஏற்படுத்த வழி வகுக்கும் என எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதை மறுத்த மத்திய அரசு தரப்பு, 200-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு அரசு கொண்டு வந்த சட்டத்தின்கீழ்தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

இந்த உத்தரவு தனி மனித உரிமையில் குறுக்கிடுவதாக என்று குறிப்பிட்ட மனுதாரர், இந்த சட்டத்தின் கீழ் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், இது குறித்து 6 வாரங்களுக்குள் பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.