துபாய்

பரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் அனுமதிப்பது குறித்து கேரள மக்கள் முடிவு எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

உச்சநீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கியதை ஒட்டி கேரள மாநிலத்தில் கடும் போராட்டம் நடந்து வருகிறது.   கேரளாவில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் கட்சி உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல் படுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறது.   ஆனால் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சித் தலைமை முதலில் வரவேற்றது.    ஆனால் கேரள மாநில காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   இந்நிலையில் துயாயில் நேற்று முன் தினம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டார்.   அப்போது அவரிடம் சபரிமலை விவகாரம் குறித்து கேட்கப்பட்டது.

ராகுல் காந்தி, ”இந்த சபரிமலை விவகாரம் பொறுத்த வரையில் ஆரம்பத்தில் இருந்த நிலை இப்போது இல்லை.   பெண்களுக்கு சம உரிமை வழங்குவதை காங்கிரஸ் ஆதரிக்கிறது.   ஆகவே ஆரம்பத்தில் தீர்ப்பை வரவேற்றது.   ஆனால் தற்போது இது உணர்வு பூர்வமானதாகி விட்டது.  மக்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டிய நிலை உள்ளது.

என்னை பொறுத்த வரையில் இரு பக்க வாதங்களுமே சரியாக தோன்றுகிறது.   ஆகவே நான் இந்நிலையில் இது பற்றி எதுவும் கூற இயலாத நிலையில் இருக்கிறேன்.   கேரள மக்கள் இது குறித்து முடிவு எடுப்பதே சரியானதாக இருக்கும் என நான் கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.