டெல்லி: கொரோனா தொற்றை காரணமாக வைத்து பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்ற தலைமை தேர்தல் ஆணையம், அதற்கான தேதிகளையும் அறிவித்துள்ளது. இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பீகார் தேர்தலை தள்ளி வைக்க கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

ராஷ்டிராவதி ஜனதா பார்ட்டி என்ற கட்சியின் தலைவரான அனில் பாரதி என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். மனுவானது அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்ஆர் ஷா ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொரோனா தொற்றை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. மனுவை வாபஸ் பெற மட்டுமே நாங்கள் உங்களை அனுமதிக்க முடியும் என்று கூறி மனுதாரரின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.