கோல்கட்டா:

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள, கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன்,  உச்சநீதிமன்றத தலைமை நீதிபதி, ஜே.எஸ். கேஹர் உட்பட ஏழு நீதிபதிகள் தன்னுடைய வீட்டில், வரும், 28ல் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
சென்னை  உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் மீது புகார்கள் கூறினார். இதையடுத்து அவர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தொடர்ந்தது. இது தொடர்பாக கர்ணன் நேரில் ஆஜராக வேண்டும் என, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, நீதிபதி கர்ணன் கோர்ட்டில் ஆஜரானார்.

தற்போது வழக்குகளை விசாரிக்க, கர்ணணனுக்கு உச்சநீதிமன்றம்  தடை விதித்துள்ளது. இதற்கிடையே  ”தலித் ஆகிய என் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததன் மூலம், எஸ்.சி., – எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீறியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது, சுயமாக வழக்கு தொடர்ந்துள்ளேன்.  ஆகவே  வரும், 28ல், தலைமை நீதிபதி உட்பட, ஏழு நீதிபதிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்,” என, கர்ணன் நேற்று  தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே உச்சநீதிமன்ற நீதிபதிகள், கர்ணனுக்கு மன ரீதியான பிரச்சினைகள் இருக்குமோ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.