ஹிஜாப் தடை வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்…

Must read

டெல்லி: கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்று பரபரப்பான இறுதிவாதங்கள் நடைபெற்ற நிலையில், தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைத்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளில், சாதி, மத வேற்றுமையை வேரறுக்கும் வகையில் சீருடை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்து வதில் மாநில அரசுகள் மெத்தனம் காட்டியதால், நாளடைவில் தளர்வடைந்து, சாதி, மதங்களை பிரதிபலிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் ஆடை அணிந்து வரத் தொடங்கி உள்ளனர். இதனால், சில இடங்களில் பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கர்நாடக மாநில கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த அம்மாநில அரசின் உத்தரவிட்டது. இதையடுத்து, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர தடை விதிக்கப்பட்டது. இது சர்ச்சையானது. இதையடுத்து மாநிலஅரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை  விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், “ஹிஜாப் இஸ்லாத்தின் அடிப்படையான விஷயம் அல்ல. சீருடை விவகாரத்தில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் கிடையாது.

சீருடை விவகாரங்களில் உரிய அறிவுறுத்தல்களை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது” என தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் சிலர் சார்பிலும், அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம் சார்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வில்  விசாரிக்கப்பட்டு வந்தது. பல கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இன்று இறுதி விசாரணை நடைபெற்றது.

இன்றைய விசாரணையின்போது,  மனுதாரர்கள் தரப்பில் , “ஆடை அணிவது என்பது அடிப்படை உரிமை என்றால், ஆடை இல்லாமல் இருப்பதும் அடிப்படை உரிமை. சிலுவை, ருத்ராட்சம் போன்றவை மத அடையாளங்கள்தான். அவற்றை அணிந்து கொண்டு மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு வரும்போது ஹிஜாபுக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்? என்று வாதிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “சிலுவை, ருத்ராட்சம் போன்றவை வெளிப்படையாக தெரிவது இல்லை. அதே நேரத்தில் யாரும் அவர்களுடைய சட்டையை கழற்றி இவற்றை சோதிப்பதும் இல்லை. ஆனால் ஹிஜாப் என்பது தனித்துவமாக வெளியே தெரியக் கூடியதாக இருக்கிறது” என்று கருத்து தெரிவித்தனர்.

இதையடுது வாதாடிய மனுதாரர் வழக்கறிஞர்,  “கல்வி நிலையங்களில் மத அடையாளங்கள் அணிந்து வரக் கூடாது என்று ஓர் அரசு கூறினால், அது அனைத்து மதத்துக்கும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும். கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு சிறுபான்மையினருக்கு எதிராக எழுதப்பட்ட தீர்ப்பு போல உள்ளது என சாடினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு வழக்கறிஞர்,  “குறிப்பிட்ட வகை உடை உடுத்துவதைக் கண்டு மற்றவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படக் கூடாது என்பதே சீருடையின் நோக்கம். அதன் அடிப்படையில்தான் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதே தவிர, மதத்தின் அடிப்படையில் தடை விதிக்கப்படவில்லை. இது மதத்திற்கு அப்பாற்பட்ட பொதுவான நடவடிக்கை” என வாதிடப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக  அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More articles

Latest article