மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி 3வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் அன்னிய நேரடி முதலீட்டையும் ஈர்க்க முடியும் என்று மார்த்தட்டிக்கொள்கிறது.

ஆனால்,  இந்த சட்டங்கள் மூலம், விவசாயிகளின் எதிர்காலம் கார்ப்பரேட்டுகளின் கைகளில் சிக்கி சின்னாப்பின்னமாகும்  நிலை உருவாகும் என அச்சம் பொது மக்களிடையே எழுந்துள்ளது. மத்தியஅரசின் இதுபோன்ற மக்கள் விரோத செயல்களால், பொதுமக்கள் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய அபாயத்துக்கு தள்ளப்படுகிறதோ என்ற அச்சம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. மத்தியஅரசின் விவசாய மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் கிளர்ந்தெழுந்து உள்ளனர். மாபெரும் போராட்டங்களை அறிவித்து, போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஆனால், பிரதமரும், மத்தியஅமைச்சர்களும், பாஜகவினரும், அவர்களது ஆதரவு கட்சியினரும், வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்று பேசி வருகின்றன.

ஆனால், இந்த மசோதாக்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஷரத்துக்களை பார்க்கும்போது, கஷ்டப்பட்டு விவசாயம் செய்யும் விவசாயிகளின் விவசாய பொருட்களின் குறைந்த பட்ச ஆதாரவிலை மட்டுமின்றி, விவசாயிகளே, கார்ப்பரேட்டுகளின் கைகளில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால்தான் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.

இந்த விஷயத்தில், பிரதமர் மோடி இரட்டை வேடம் போட்டிருக்கும் அவலமும், அபத்தமும் அரங்கேறியுள்ளது. அவை அம்பலமாகி உள்ளது.

தற்போது விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் கைகளில் பிடித்துக்கொடுக்கும் பிரதமர் மோடி, கடந்த 2011ம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, விவசாயிகளுக்கு ஆதரவான நிலையில் இருந்ததும், அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ்கூட்டணி அரசுக்கு எதிராக, விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கிய தகவலும் வெளியாகி உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு, விவசாயிகள் மற்றும் விவசாய பொருட்களின் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் போன்றரவை பற்றி ஆராய, அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மாநில முதல்வர்கள் மற்றும்  வேளாண்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்தார். அந்த குழுவுக்கு சேர்மனாக – அன்றைய குஜராத் முதல்வர் மோடியையே மன்மோகன் சிங் நியமித்து, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கோரியிருந்தார்.

அதன்படி, அந்த குழுவின் சேர்மன் என்ற முறையில், ஆய்வு அறிக்கையை மோடி, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு சமர்ப்பித்திருந்தார். அதில், விவசாயி களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க,  MSP க்கு (Minimum Support Price – குறைந்தபட்ச ஆதரவு விலை) சட்டப்படியான அங்கீகாரம் தரவேண்டும் என சிபாரிசு செய்திருந்தார்.

அதன்படி, விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருளுக்கு, அரசுதான் குறைந்த பட்ச ஆதார விலை என ஒரு விலையை நிர்ணயிக்கிறது. இந்த விலை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச உத்தரவாதத்தை அளித்து வருகிறது.

அன்று, விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாய பொருட்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட  அதே மோடி, இன்று பிரதமராக இருக்கும்போது,  விவசாயிகளுக்கு எதிரான மன நிலையில், மாறுபட்டு நிற்கிறார். அன்று,  அவரால் நடைமுறைக்கு  கொண்டு வரப்பட்ட MSP சட்ட பாதுகாப்பை இன்று தர மறுக்கிறார்….

ஏற்கனவே அனைத்து தொழிற்துறைகளையும், கார்ப்பரேட்டுகளின் கைகளில் தாரைவார்த்துள்ள மோடி அரசு, தற்போது, புதிய வேளாண் மசோதாக்கள் மூலம்  விவசாயிகளையும் கார்ப்பரேட்டுகளிடம் அடிமைப்படுத்தச்சொல்கிறது…

ஏன் இந்த தள்ளாட்டம், எதற்காக இந்த இரட்டை வேடம்?  இது நியாயந்தானா பிரதரே…? துகுறித்து பிரதமருக்கு எடுத்துக்கூறப்போவது யார்?

சரி இது ஒருபுறம் இருக்கட்டும், மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை சற்றே மேலோட்டமாக பார்க்கலாம்… அதன்பிறகு பிரதமரின் செயல் சரியா இல்லை என்பதை வாசகர்கள் தீர்மானிக்கலாம்…

விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சிபாரிசு செய்த மோடி, விவசாயிகளை வாழவைக்கப் போவதாகச் சொல்லிக்கொண்டு வந்திருக்கும் மூன்று சட்டங்கள் குறித்தும் தெரிந்துகொள்வோம்…

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்களிலும், குறைந்த பட்ச ஆதார விலை உள்பட விவசாயிகளின் நலன் காக்க ஒரு சில ஏற்பாடுகள் உள்ளன. ஆனால், இந்த விஷயத்தில் விவசாயிகள் முடிவு எடுக்க முடியாத அவலமும் அதிர்ச்சியும் உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள், விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) மசோதா (Farmers Produce Trade and Commerce (Promotion and Facilitation)Bill)

இந்த மசோதாவின்படி விவசாய பொருட்களின் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் என்ற நடைமுறையே முற்றிலுமாக நீக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள எம்எஸ்பிபடி, விவசாய பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயித்து, விவசாயிகள் நஷ்டம் ஏற்படாதவாறு,  மாவட்டந்தோறும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து விவசாய பொருட்களை கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. பின்னர் அவற்றையே அரசே வியாபாரிகளுக்கு விற்பனை செய்து பணத்தை விவசாயிகளுக்கு வழங்குகிறது.  மேலும், போதிய விலை இல்லாத பட்சத்தில், விலை உயரும் வரையில் விவசாயப் பொருட்களைப் பாதுகாப்பதற்காக குடோன் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. இதனால், விவசாயிகளின் ஊழைப்புக்கு குறைந்த பட்ச ஆதாயம் கிடைத்து வருவது உறுதியாகி இருக்கிறது. .இது தவிர வியாபாரிகள் மூலம் மாநில அரசுகளுக்கு வரி வருவாயும் கிடைத்து வருகிறது.

ஆனால், தற்போதைய புதிய மசோதாவின் ஷரத்துக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி,  விவசாயிகள் அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களைத் தவிர்த்து விட்டு, அவர்கள் விரும்பும் வியாபாரிகளுக்கு நேரடியாக விற்பனை செய்துகொள்ள முடியும். இதனால் கூடுதல் விலை கிடைக்கும் என சட்டம் சொல்கிறது.

இதை மேலோட்டமாக பார்க்கும்போது, விவசாயிகளுக்கு அதிக பலன் கிடைப்பதுபோல ஒரு தோற்றம் தெரியும். ஆனால், அதன் பலன் அடிமைத்தனமாகி விடும். விரைவில், விவசாயிகள் பெரு வியாபாரிகளிடமும், பெரு நிறுவனங்களிடமும் அடிமையாகி, பின்னர் அவர்கள் கூறும் விலைக்கு, விவசாய பொருட்களை விற்பனை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இவ்வாறு செயல்பட தொடங்கினால், அரசால் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக கொண்டுவரப்பட்ட எம்எஸ்பி கேள்விக்குறியாகி விடும், அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடமும் இன்ன பிற வசதிகளும் முற்றிலும் அகற்றப்படும் சூழல் ஏற்படும்.

குறைந்தபட்ச ஆதார விலை என்றால் என்ன என்ற நிலை உருவாகிவிடும்.. ஆனால், இதற்காக (எம்எஸ்பி) மோடி அரசு மேலும் சட்டத்தை கொண்டு வந்து விவசாயிகளை மேலும் குழப்பி உள்ளது.

விவசாய பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யாத மத்தியஅரசு,  அதற்காக கொண்டு வந்துள்ள மசோதாவின் பெயர்,

விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) மசோதா (Farmers (Empowerment and Protection) Agreement of Price Assurance and Farm Services) 

இந்த மசோதாவில் உள்ள ஷரத்துக்களின்படி,  விவசாயிகள்,  விவசாயம்  சார்ந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர்களுடன் முன்கூட்டியே விலையை நிர்ணயித்து விவசாயிகள், ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

அதாவது, விவசாயிகளை பெருநிறுவன முதலாளிகளிடம் அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கச் சொல்கிறது. விவசாயிகள், விவசாயம் பயிடுவதற்கு முன்பே குறைந்த பட்ச விலை கிடைக்கும் என ஆசையை காட்டியுள்ளது.  விவசாயிகள், தங்களது பயிர்களுக்கு, தாங்கள் விரும்பிய விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி உள்ளது.

ஆனால், இது சாத்தியப்படுமா? விவசாயம் இயற்கையை நம்பியே உள்ளது. இதனால் சிலமுறை நல்ல விலையும் கிடைக்கும், இயற்கை பேரழிவால், பெரும் நஷ்டமும் ஏற்படும். இரண்டையும் சமாளித்துதான் விவசாயிகள் உணவுபொருட்களை விளைவித்து வருகின்றனர்.

விதைப்பதற்கு முன்பே விலை பற்றியும், வாடிக்கையாளர் பற்றியும் தெரிந்து விடுவதால் விவசாயிக்கு மிகப் பெரிய நிம்மதி கிடைக்கும் என மசோதா கூறுகிறது. மேலும்,  அறுவடை காலத்தில் இடைத்தரகர்கள் புகுந்து விலையை குறைத்து விடுகின்றனர்.  இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறத. இது போன்ற ஏமாற்று வேலைகளிலிருந்து காண்ட்ராக்ட் விவசாயம், விவசாயிகளை காப்பாற்றுகிறது என்று கூறுகிறது.

ஆனால், பயிர்கள் பயிரிடுவதற்கு முன்பே குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்கும் என்று கூறியுள்ள மசோதா, பயிர் விளையாவிட்டாலோ, சரியானபடி மகசூல் கிடைக்காவிட்டாலோ, ஒப்பந்தம் போட்ட நிறுவனம் பணம் கொடுக்குமா? என்பது குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை.

அதுபோல, பயிர்கள் பயிரிடுவதற்கு முன்பே குறைந்தபட்ச விலை கொடுக்க எந்தவொரு சில்லரை வியாபாரிகளும் முன்வர மாட்டார்கள் என்பது ஊறறிந்த உண்மை. அப்படியிருக்கும்போது, விவசாயிகளை, தங்கள் வசப்படுத்தப்படுத்தப்போவது, விவசாயம் சார்ந்த தொழில்நிறுவனங்கள், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் முன்வரும்…

அவர்கள் என்ன செய்வார்கள்… முதலில் விவசாயிகளுக்கு தாராளமாக பணம் கொடுப்பார்கள்.. பின்னர் விவசாயிகள் விளைவித்த பொருட்களில் குற்றம் குறை கூறி, விலையை அவர்களே நிர்ணயிக்கத் தொடங்குவார்கள். பின்னர் அந்த நிறுவனங்கள் என்ன சொல்கிறதோ அதுதான் விலையாக இருக்கப் போகிறது. விவசாயிகள் அந்த நிறுவனங்களிடம் அடிமைப்பட்டு போவார்கள்…

இதுதான் நடக்கும்… ஆனால், மோடி அரசு, விவசாயிகளே விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ஏமாற்றுகிறது.

இந்த மசோதா உண்மையிலேயே விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக கொண்டு வரப்பட்டதா என்றால், அது முற்றிலும் பொய்யே… மோடி அரசு எப்போதும்போல கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியாக செயல்பட்டு, விவசாயம், உணவுப்பொருட்கள் சாந்ரத் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு உள்ளது. பெரு நிறுவனங்களுக்கு சாமரம் வீசி வரவேற்றுள்ளது.

இந்த இரு மசோதாக்கள் மட்டுமின்றி, 3வதாக கொண்டு வந்துள்ள மசோதாவின் பெயர்,

 அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா 2020 (Essential Commodities (Amendment) Bill)

பொதுவாக விவசாயிகள், வியாபாரிகள், உணவுப்பொருட்களை போன்ற அத்தியாவசிய பொருட்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு ஸ்டாக் வைத்துக்கொள்வது வழக்கம். ஏற்கனவே உள்ள சட்டம் அதை உறுதி செய்கிறது.

ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள திருத்த மசோதாவின் படி,  இந்தப் பொருட்கள் அனைத்தையும்  அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருப்பதுடன் ஸ்டாக் வைக்கும் வரையறையையும் தளர்த்தி உள்ளது.

அதாவது, அழுகும் பொருட்கள்,  சராசரி விலையை விட 50 சதவீதத்திற்கு மேல் விலை ஏறினால் மட்டும்தான் அந்த ஸ்டாக் வைக்க முடியும் என வரையறை செய்துள்ளது. அழுகாத பொருளுக்கு 100 சதவீதம் வரையில் விலை ஏறினால் மட்டும்தான் ஸ்டாக் வைக்க முடியும் என்று அளவுகோல் விதித்துள்ளது.

இந்த ஷரத்துக்கள் கார்ப்பரேட்டுகளுக்கே கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்களுக்கு  ஆதரவாக உள்ளது. இதனால் விவசாய பொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள், அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படும். நாட்டில்  உணவுப்பொருட்களின் விலை பன்மடங்கு உயரும் அபாயமும் எழுந்துள்ளது.

அதனால்தான், விவசாயிகள், நாட்டு மக்கள் மீது அக்கறையின்றி, மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஆனால், பாஜக அரசோ,  தொழில்துறை, வியாபாரம் என்று அனைத்து துறைகளிலும், உற்பத்தியாளர்களுக்கு தனது பொருளுக்கான விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் உள்ளது.  ஆனால் தேசத்தின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் இதுநாள் வரை இருந்ததில்லை. அதை உறுதி செய்யவே மூன்று புதிய சட்டங்களை மத்திய அரசு இயற்றி இருப்பதாக தெரிவித்து உள்ளது.

விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும்  நடுவில் இடைத்தரகர்கள் நின்றுகொண்டு கொள்ளை லாபம் அடைகிறார்கள் இந்த இடைத்தரகர்கள் இனி வேலை இழந்து விடுவார்கள், விவசாயிகள் வாழ்வு வளம்பெறும் என்று கூறுகிறது.

இது பிரதமர் மோடியின்  கனவுத் திட்டம் என்றும்,  வரலாற்று சிறப்புமிக்க இந்த புதிய சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு பாதுகாப்பும் சுதந்திரமும் வழங்கப்படுவ தாகவும்,  விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க இந்த புதிய சட்டங்கள் உதவி புரியும் என்கிறார்கள், பாஜகவினரும்  அவர்களின் துதிபாடிகளும்…

மொத்ததில்,  இந்தியாவையும், இந்த மக்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்குவதில்  பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவது இதுபோன்ற சட்ட மசோதாக்கள் மூலம்  உறுதியாகி வருகிறது.