சென்னை

நாளை ஆடி அமாவாசை தினம் என்பதால் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க சரியான நேரம் எது என்பதை இங்குக் காண்போம்.

மாதா மாதம் அமாவாசை மற்றும் இறந்தவர்களின் வருடத் திதி அன்று எள்ளும் நீரும் கலந்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும்.   ஒரே தினத்தன்று தெய்வ காரியம் மற்றும் பித்ருக்கள் காரியம் இரண்டும் இணைந்தால் முதலில் பித்ருக்கள் அதாவது முன்னோருக்கான காரியங்களை முடித்துவிட்டு பிறகுதான் தெய்வ பூஜைகளைச் செய்ய வேண்டும் என சாஸ்திரம் தெரிவிக்கிறது.

பெற்றோரை வாழும் காலத்தில் பிள்ளைகள் கவனிக்க இயலாத நிலை வந்தாலும் வேறு யாரும் அவர்களைக் கவனிக்க முடியும்.   ஆனால் இறந்த பிறகு அவர்களுக்கு சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் செய்து பசி தாகம் நீக்குவது பிள்ளைகள் மட்டுமே செய்ய முடியும்.

இவ்வாறு முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வதால் குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடக்கும்.  குழந்தை இல்லாதோருக்குக் குழந்தைப்பேறு உண்டாகும்.   அனைத்து செல்வங்களும் பெற்று கிரக தோஷம் நீங்கி வாழ்வார்கள்,   சனி பகவானால் அடைந்துள்ள துன்பங்கள் நீங்கி ஆயுள் ஆரோக்கியம் அதிகரித்து மனக்குழப்பம் அகன்று நல்ல காலம் பிறக்கும்.

இவ்வாறு பித்ரு தர்ப்பணம் கொடுக்க ஆடி அமாவாசை மிகவும் உகந்த நாளாகும்.   இந்த தினத்தன்று தந்தை, தாத்தா, கொள்ளுத்தாத்தா, தாய், பாட்டி, கொள்ளுப்பாட்டி, தாய் வழியினர் தந்தை வழியினர் என அனைவருக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம்.   ஆதரவற்ற நிலையில் இறந்தோருக்கும் கொடுக்கலாம் என புராணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

நாளைய ஆடி அமாவாசையானது ஜூலை 19 அன்று இரவு 12.17 மணிக்கு தொடங்கி ஜூலை 20 ஆம் தேதி இரவு 11.35 மணி வரை உள்ளது.  எனவே நாளை சூரிய உதயத்துக்கு பிறகு மாலை வரை தர்ப்பணம் வழஙக உகந்த நேரமாகும்.  பொது முடக்கம் அமலைல் உள்ளதால் அவரவர் இல்லம் அல்லது அரசு அனுமதித்துள்ள இடங்களில் விதிமுறைகளை பின்பற்றி தர்ப்பணம் அளிக்கலாம்.