1500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய ஜீடோ ரத்தினம் நேற்று தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் காலமானார்.

அதிக படங்களில் சண்டை பயிற்சியாளராக இருந்ததற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இவர் வயது முதிர்வு காரணமாக தனது 92 வயதில் மரணமடைந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜீடோ சண்டைக் காட்சிகள் நிறைந்த ‘பாயும் புலி’ உட்பட ரஜினி நடித்த 46 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்தியத் திரைப்படங்கள் மட்டுமன்றி சில ஹாலிவுட் படங்களுக்கும் சண்டைப் பயிற்சி செய்துள்ளார்.

எம்.ஆர். ராதா நடித்த படங்களில் அவருக்கு டூப்பாக கலையுலகில் காலடியெடுத்து வைத்த ரத்தினம் 1966ல் ஜெய்சங்கர் நடிப்பில் வெளிவந்த வல்லவன் ஒருவன் படத்தில் முதன்முதலாக சண்டைப் பயிற்சியாளராக தனது பயணத்தை தொடர்ந்தார்.

கலையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை வடபழனியில் உள்ள ஸ்டண்ட் யூனியன் அலுவலகதாதில் இன்று அவரது உடல் வைக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நாளை சனிக்கிழமை குடியாத்தத்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.