சென்னை,

பிஎஸ்சுக்கு ஆதரவாக மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் கூடுவதாக  தகவல் பரவியதையடுத்து  அங்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

நேற்று இரவு தமிழக முதல்வர் ஓபிஎஸ்  அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை எதிர்த்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதையடுத்து அவரை கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்தார். இந்த  நிலையில் தான் ஏற்கனவே அளித்த ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற போவதாக முதல்வர் அறிவித்து உள்ளார்.

அவரை ஆதரிக்க முடியாது என்றும், சசிகலாவையே முதல்வராக ஆக்குவோம் என்றும் அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இன்று காலையில் கூடிய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 130 எம்எல்ஏக்கள் சசிகலாவை ஆதரிப்பதாக அவர் தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையே, சமூக வலைதளங்களில் சசிகலாவை எதிர்த்தும், ஓபிஎஸ்சை ஆதரித்து பலரும் பதிவுகளை எழுதி வருகிறார்கள்.

இவர்களில் பலர் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் கூட இருப்பதாக பதிவிட்டனர். இது காவல்துறை யினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், ஜல்லிக்கட்டு தொடர்பாக நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வன்முறை எற்பட்டது. மீண்டும் அதுபோல் ஒரு நிகழ்வு நடைபெற்று விடக்கூடாது என்று போலீசார் தீவிர நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.

இதன் காரணமாக  சென்னை மெரினா கடற்கரை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அதிரடி படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கடற்கரை அருகே உள்ள விவேகானந்தர்  இல்லத்துக்கு அருகே தற்காலிக காவல்நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.