டெல்லி:
ல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான போராட்டம் இனி நீதிமன்றத்தில் தொடரும் என மல்யுத்த வீரர்கள் கூறினர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கடந்தாண்டு இறுதியில் பாலியல் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பிரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்தியும் ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூரை சந்தித்து சில கோரிக்கைகளை வலியுறுத்திய நிலையில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் டெல்லி போலீசார் பிரிஜ் பூஷனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் நேற்று ஒரே மாதிரியான ட்வீட்களை பதிவு செய்தனர். அதில், “இந்த வழக்கில், எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்கள் போராட்டம் தொடரும். ஆனால் அது நீதிமன்றத்தில் இருக்கும், சாலையில் அல்ல என்று கூறினர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் சீர்திருத்தங்கள் தொடர்பாக வாக்குறுதி அளித்தபடி தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ளது. ஜூலை 11 தேர்தல் தொடர்பாக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை காத்திருப்போம்” என்றார். மேலும் சில நாட்கள் மல்யுத்த வீரர்கள் சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு எடுப்பதாகவும் ட்வீட் செய்துள்ளனர்.

அதோடு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூருக்கு 6 மல்யுத்த வீரர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், “நாங்கள் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் பங்கேற்பதன் காரணமாக, எதிர்வரும் ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு இன்னும் தயாராக வில்லை. அதனால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

எங்கள் ஆறு நபர்களுக்கு பஜ்ரங் புனியா (65 கிலோ), சாக்ஷி மாலிக் (62 கிலோ), அவரது கணவர் சத்யவர்த் காடியன் (97 கிலோ), சங்கீதா போகட் (57 கிலோ), ஜிதேந்தர் குமார் (86 கிலோ) மற்றும் வினேஷ் (53 கிலோ) ஆகியோருக்கு அவகாசம் வழங்க வேண்டும்.

ஆகஸ்ட் 10, 2023-க்குப் பிறகு விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கோரியுள்ளனர். 6 பேரின் கையொப்பம் அடங்கிய கடிதம் அமைச்சருக்கு அனுப்பபட்டது.

கடிதத்தைப் பகிர்ந்ததோடு வினேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மல்யுத்த வீரர்கள் கடந்த 6 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டதால், பயிற்சிக்கு போதிய நேரம் கிடைக்க வில்லை. அதனால் விசாரணை தேதியை ஒத்திவைக்க மட்டுமே கோரிக்கை விடுத்துள்ளோம். இது தீவிரமான விஷயம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

அதனால் தான் இப்போது இந்தக் கடிதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். மல்யுத்த வீரர்களிடையே ஒற்றுமையை உடைக்க எதிரிகள் முயற்சி செய்கிறார்கள். அவர்களை வெற்றி பெற அனுமதிக்க முடியாது” என்று கூறினார்.