சென்னை: தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் வலியுறுத்தி, ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்பினர் தலைமைச்செயலகத்தில் இன்று மனு கொடுத்தனர். அப்போது, முதல்வருக்கு ஆன்லைன் மூலம் 1 லட்சம் மனுக்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

உயிரிக்கொல்லி நோய்களை உருவாக்கி வருவதாக கூறி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தின் 100வது நாளின்போது, அதாவது  2018-ஆம் ஆண்டு மார்ச்22ல் போராட்டம் நடத்தியபோது, அது வன்முறையாக மாறியது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான, துப்பாக்கிச் சூட்டிற்கு 13 நபர்கள் பலியாகினர். இதையடுத்து, அப்போதைய அதிமுக அரசு ஆலையை மூட உத்தரவிட்டது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக ஆலை செயல்படாமல் உள்ளது. 

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையால் பணி வாய்ப்பு பெற்ற ஏராளமானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். அவர்கள் தங்களுக்கு மீண்டும் வழங்கும் வகையில் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,  ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், ஆகவே தமிழக அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்பினர் இன்று சென்னை வந்து, தலைமைச்செயலகத்தில் ஆலையை திறக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர். அந்த மனுவில்,  “ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். ஏனெனில் அதனால் ஏற்பட்ட வேலையிழப்புக்கள் தூத்துக்குடியில் மக்களின் வாழ்வாதாரத்தை முடக்குகின்றன. அந்த வகையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஒப்பந்ததாரர்கள், லாரி உரிமையாளர்கள், மீனவர்கள், வியாபாரிகள், கனரக வாகன பழுதுபார்ப்பவர்கள் உள்ளடக்கிய கூட்டமைப்பு சார்பில் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் சுமார் 20,000 தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த ஆலையை சார்ந்திருந்த பல்வேறு தொழில்கள் முடங்கியதால் பொதுமக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன. வேலை இழந்தவர்கள் அன்றாட உணவிற்குக் கூட வழியில்லாமல் தூத்துக்குடியை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை, மூடப்பட்டதன் விளைவாக தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இவற்றையெல்லாம் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை தவறிழைத்திருந்தால் அதற்கான தீர்வு என்ன என்பதைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். நிரந்தரமாக ஆலையை மூடுவது என்பது எந்த விதத்தில் தீர்வாக இருக்கக் கூடும்? ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு வேலையை இழந்ததால், அன்றாட தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத இன்னல்களுக்குத் தூத்துக்குடி வாழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதிலிருந்து, உள்ளூர் மக்கள் பயனடையும் வகையில் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

எங்களுக்கென்று வேலை வாய்ப்பு இருந்தால் மட்டுமே எங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக மீட்டெடுக்க முடியும். கடந்த 25 ஆண்டுகளாக தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு உதவியாக இருந்த ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டு , வேலை வாய்ப்பு வழங்கி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தூத்துக்குடி மாசுபாட்டிற்கு சாலைப் புழுதியும், வாகனப் புகையும்தான் முக்கியக் காரணம் என்று பல அறிக்கைகள் உறுதிப்படுத்துகிறது. அதற்கேற்றார்போல ஆலை மூடப்பட்டதில் இருந்து மாசு அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆகவே அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பினர் இந்த திடீர் கோரிக்கை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில், உறுதியாக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது முதலமைச்சராக உள்ள நிலையில், ஆலை விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஆலையை மூடுவது தொடர்பாக அவர் கடந்த 2018ம் ஆண்டு விடுத்த  அறிக்கையில் கூறி இருந்ததாவது,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்படும் பேராபத்தை அரசுக்கு எச்சரிக்கும் வகையில் பொதுமக்கள் முன்னெடுத்த தன்னெழுச்சியான போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவினை தெரிவிப்பதோடு, ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எவ்வித அனுமதியையும் வழங்கக்கூடாது என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் சுற்றுச்சூழலை மாசுபடுத்திக் கெடுக்காத வகையில் அமைக்கப்பட வேண்டும் என்பதை சட்டங்கள் வலியுறுத்தும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளால் தாமிரபரணி ஆறும், அதனால் பயன்பெறக்கூடிய விளைநிலங்களும் பாழ்பட்டுக் கிடப்பதோடு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்களின் உயிருக்கும் உலைவைக்கும் வகையில் புற்றுநோய், தோல்நோய்கள் உள்ளிட்ட அபாயகரமான நோய்களை உருவாக்கி வருகிறது.  இந்த ஆலையினால் நிலத்தடி நீரில் தாமிரம், ஆர்சனிக், புளோரைடு, குரோம் உள்ளிட்ட நச்சுப்பாதிப்புகள் கலந்துள்ளன.  நிலத்தடி நீர் பாழ்பட்டதால் மண் பாதிப்படைந்து மக்களின் உயிர்ப்பலி தொடர்கிறது. அதேபோல், மண்ணுக்கும் மக்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலையினால் தொடர்ந்து ஆபத்து நீடிக்குமேயானால் அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, மக்களின் உயிரை காவு வாங்கும் இதுபோன்ற கேடான செயல்பாடுகளை ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்திட வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.