சென்னை: தமிழ்நாட்டில் வரும் திங்கட்கிழமை முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நீதிமன்றங்களிலும் ஆன்லைன் மூலமா விசாரணை நடத்தப்பட்டு வந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் விசாரணையை நிறுத்திவிட்டு வழக்கமான நடைமுறையில் நேரடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என நீதிபதிகள், பொறுப்பு தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதையடுத்து,  வழக்கமான முறையில் நேரடியாக விசாரிக்கப்படும்’ என  அறிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் தொற்று பரவல் தீவிரமடைந்ததும், மீண்டும் ஆன்லைன் விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்து அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு, வழக்கமான நடைமுறைகள் தொடங்கி உள்ளது.

இதையடுத்து வரும் திங்கட்கிழமை (மார்ச் 7ந்தேதி) முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நீதிமன்ற பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ளார்.