சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக  மாநில அளவில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படும் என இன்று காஞ்சிபுரத்தில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக விவசாய சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது அறிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உட்பட 13 கிராமங்களில் இருந்து சுமார் 4,800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த விமான நிலையம் ஏகனாபுரத்தை மையமாக வைத்து அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளதாலும், அந்த கிராமத்தில் மொத்தமாக நிலம் எடுக்கப்படுவதாலும் பொதுமக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த போராட்டம்,  233 நாட்களாக தொடர்கிறது.

இதற்கிடையில்,   தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டிட்கோ சர்வதேச ஒப்பந்தப் புள்ளியை கோரியுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்பம், பொருளாதார அறிக்கை தயாரிப்பது, விமான போக்குவரத்தின் வளர்ச்சியை ஆய்வு செய்வது, மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் பரந்தூர் விமான நிலையத்துக்கு இடையே உள்ள சாலை மற்றும் ரயில் போக்குவரத்து தேவைகள் தொடர்பாக ஆய்வு செய்வது தொடர்பாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.

இந்த நினலையில், பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பரந்தூர் பகுதி மக்களுக்கு  ஆதரவாக தமிழ்நாடு விவசாய சங்க காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் காஞ்சிபுரம் விவசாய சங்க மாநில செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் விவசாய சங்கத்தினர் கிராம பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசும் மாவட்ட ஆட்சி நிர்வாகம் செயல்பட வேண்டும் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்பதை குறித்து அறிக்கை வெளியிடப்படவில்லை சுற்றுச்சூழல் அறிக்கை உள்ளிட்டவை பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படுத்த வேண்டும்.

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அரசு திட்டங்களுக்கு நிலம் எடுக்கும் போது விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலம் எடுக்க மாட்டோம் என்று கூறியிருந்த நிலையில் நீர்நிலைகள் குடியிருப்பு பகுதிகளை அழித்து விமான நிலையம் அமைக்க வேண்டாம் என உறுதியாக கோரிக்கை வைக்கிறோம் என விவசாய சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு இவ்விடத்தை கைவிட மறுக்கும் நிலையில் போராட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் நடத்த திட்டமிடுவோம் என மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குறிக்கப்பட்டு பாதுகாப்பிற்காக தீயணைப்பு வாகனம் ஆம்புலன்ஸ் மற்றும் கைது செய்ய நேரிட்டால் அவர்களை அழைத்து செல்ல அரசு பேருந்துகள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.