டில்லி

னல் மின் நிலையங்களில் கடும் நிலக்கரி பற்றாக்குறையால் நாடெங்கும் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்டாகி உள்ளது.

நாட்டின் மின்சார தேவையில் பெருமளவு அனல்மின் நிலையங்கள் மூலமாகவே நிறைவேற்றப்பட்டு வருகிறது. எனவே மின்சார உற்பத்தியில் 70 சதவீதம் நிலக்கரி எரி பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் தற்போது நிலக்கரிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

சீனாவில் நிலக்கரி தட்டுப்பாட்டால், பெரிய தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தின.  சீன மக்கள் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாகச் சீன மக்கள் தவித்ததாகச் செய்திகள் வெளியாகின. இதைப் போல், இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக நிலக்கரி கையிருப்பு மிக வேகமாகத் தீர்ந்து வருவதாகத் தகவல்கள் பரவுகின்றன.

இந்தியாவில் மொத்தம் உள்ள 135 அனல் மின் நிலையங்களில் அடுத்த 3 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பில் இருப்பதால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. வழக்கமாக அனல் மின்நிலையங்களில் 14 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பில் வைத்திருக்கப்படும்.

தற்போது ஒரு சில மாநிலங்களில் உள்ள அனல் மின் நிலையங்களில் அடுத்த நாள் தேவைக்கே கூட நிலக்கரி இல்லாத மிக மோசமான தட்டுப்பாடு நிலவுகிறது.  இதனால் மின் விநியோக நிறுவனங்களான டாடா பவர் மற்றும் கெயில் ஆகியவை நிலக்கரி பற்றாக்குறை இருப்பதால் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் வாயிலாக எச்சரிக்கை செய்து வருகின்றன.

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு, மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்து இருப்பதால், மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த 8ம் தேதி அதிகபட்சமாக மின் தேவை 172.41 ஜிகா வாட்டாக அதிகரித்துள்ளது. நிலக்கரி தட்டுப்பாட்டால், 135 அனல் மின் நிலையங்கள் மூலம் 165 ஜிகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யக்கூடிய நிலை தற்போது நிலவி வருகிறது.

நாட்டில் பொருளாதார மீட்புப் பணிகள் மின் பற்றாக்குறையால் தொய்வடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.  ஆகவே அனல் மின் நிலையங்களுக்கு வழங்கப்படும் நிலக்கரி ஒதுக்கீட்டை உயர்த்தித் தர வேண்டுமெனப் பல மாநில முதல்வர்களும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து கடிதம் எழுதி வருகின்றனர்.