சென்னை: நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பிய அனுப்பியது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தை பாஜக புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தற்போது அதிமுகவும் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது.

தமிழக அரசின் நீட் தேர்வுக்கு விலக்குகோரும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கும் நிலையில், 5ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தமிழக அரசு  அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பில்,  நீட் தேர்வுக்கு விலக்குகோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அரசின் அனுமதியை பெறுவதற்கு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இது குறித்து முதலமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, பிப்ரவரி 1 ஆம் தேதி திருப்பி அனுப்பியுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராக தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தமிழக அரசு, இந்த கருத்துகள் ஏற்கத்தக்கவை அல்ல என்று தெரிவித்துள்ளது. நீட் தமிழக கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்பதில் தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை மீண்டும் சட்டமன்றதில் இயற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் எனக் கூறியுள்ளது.

இது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க இன்று காலை  நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.,இதில் கலந்துகொள்ள சட்டமன்ற கட்சிகள் உள்பட 13 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில்,  இந்த கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது.

அதிமுக ஆட்சியின்போதும் நீட் விலக்கு மசோதா கொண்டு வரப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி, பின்னர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்ட நிலையில் அது திருப்பி அனுப்பப்பட்டது. அப்போது,  அதிமுக அரசுக்கு எதிராக திமுக உள்பட கூட்டடணி கட்சிகள், அரசியல் செய்து லாபம் பெற்றதாகவும், அதனால், தற்போது நடைபெற வுள்ள சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பாஜக இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சியான அதிமுகவும் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.