மாநில அளவிலான அரசியல் என்று நாம் எடுத்துக்கொண்டால், இந்தியளவில், மிக நீண்டகாலம் காத்திருந்து, முதலமைச்சர் பதவியை பிடித்துள்ளார் ஸ்டாலின்.

கடந்த 1960களின் இறுதியிலேயே, தனது பதின்ம வயதுகளிலேயே, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கிவிட்டார். அதன்பிறகான ஆண்டுகளில், சிறிதுசிறிதாக கட்சியில் வளர்ச்சிபெற்று, கடந்த 1984ம் ஆண்டு, முதன்முதலாக சட்டமன்ற தேர்தலில் வாய்ப்புபெற்ற ஸ்டாலின், வெற்றியை சுவைப்பதோ 1989ம் ஆண்டுதான்.

1989ம் ஆண்டே அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டவருக்கு, 1996ம் ஆண்டே, சென்னை மேயர் பதவிதான் கிடைத்தது. பின்னர், ஒருவழியாக 2006ம் ஆண்டு அமைச்சர் பதவியும், 2009ம் ஆண்டு துணை முதல்வர் பதவியும் கிடைத்தது.

2001ம் ஆண்டே, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டவருக்கு, 2016ம் ஆண்டுதான் அதுவும் கிடைத்தது. ஆக, எந்த ஒன்றுக்குமே, மிக நீண்ட காத்திருப்பில் இருந்துதான் வாய்ப்பை பெற்றுள்ளார் ஸ்டாலின்.

தற்போது, ஒட்டுமொத்தமாக பார்க்கையில், தனது அரசியல் பயணத்தில், அரைநூற்றாண்டு கால நெடிய காத்திருப்பிற்கு பிறகு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

இந்தியளவில், உமர் அப்துல்லா, நவீன் பட்நாயக், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், ஜெகன்மோகன் ரெட்டி, குமாரசாமி, உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர், எளிதான முறையில், குறைந்த கால காத்திருப்பில், முதல்வர் பதவியை பெற்றவர்கள் என்பதை நாம் கவனிக்க வ‍ேண்டியுள்ளது.