சென்னை:
ஸ்டாலின் குறித்து எடப்பாடி விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கையில் நேற்று (12.03.2023) ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் குறித்து நாவடக்கம் இன்றி விமர்சனம் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அவரது பேச்சு அநாகரிகத்தின் உச்சம். மேலும், அனைவரையும் முகம்சுளிக்க வைக்கும் வகையில் உள்ளது. வக்கிர குணம் கொண்ட ஒருவரால்தான் இவ்வாறு பேசுமுடியும். தமிழ்நாட்டைஆட்சிசெய்த முதலமைச்சர்களில்இவ்வளவு தரம்தாழ்ந்து, அரசியல்நாகரிகம் இல்லாமல் பேசும் முதலமைச்சரை தமிழ்நாடுபார்த்ததில்லை.

ஒரு எதிர்கட்சி தலைவராக இருந்து கொண்டு அவர் பேசும் பேச்சுகளில் கவனம் வேண்டாமா? தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். அவருக்கு நாளுக்குநாள் மக்கள் செல்வாக்கு பெருகிக் கொண்டிருப்பதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் நிலைகுலைந்து போய், அரசியல் முதிர்ச்சியின்றி எடப்பாடி பழனிசாமி இப்படிப் பேசி வருகிறார். சமீபகாலமாக திரு எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுகள், கண்ணியமான தமிழ்நாட்டின் அரசியல் நாகரீகத்திற்கு, இழுக்கு வந்துவிடும் போலிருக்கிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசிய தரம் குறைந்த பேச்சுக்கு, அந்தத் தொகுதி மக்கள் அவருக்கு தகுந்த பதிலடி கொடுத்து, மிக மோசமாக அவரது கட்சியினரை தோற்கடிக்க வைத்தார்கள். அதிலிருந்து அவர் பாடம் கற்றதாகத் தெரியவில்லை.

இதேபோன்று வரும் காலங்களில் பேசினால் அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மேலும், சொந்தக் கட்சியினரே அவரை விட்டு விலகி, அவர் அரசியல் அநாதையாகி விடுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.