சென்ன‍ை: கொரோனா பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி, நிலைமையை சிக்கலின்றி கையாள, ஐஏஎஸ் அந்தஸ்திலான அதிகாரிகளை, மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும்படி, மாநில நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின்.

மே 6ம் தேதி அதிகாலை 4 மணிமுதல், கொரோனா தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் இயக்கமாக மாற வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தனது இல்லத்தில், தொடர்ந்து இரண்டாவது நாளாக, தமிழக தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு தொடர்பான சந்திப்பை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் மேற்பார்வை அதிகாரிகள், மருத்துவமனைகளுக்கான ஆக்ஸிஜன் தேவை, படுக்கை வசதிகள், போதுமான மருத்துவர்கள் உள்ளிட்டவற்றை கவனிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.