புதுடெல்லி: இந்தியாவில், மருத்துவத்திற்கான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பெருமளவில் நிலவும் சூழலில், மத்திய அரசின் சுங்கத்துறை கட்டுப்பாட்டில், மே 3ம் தேதிவரை, 22,920 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தேங்கிக் கிடந்ததாய் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலை, ராஜசேகர் என்பவர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், மோடி அரசின் நிர்வாக சீர்கேட்டால், கொரோனா நோயாளிகளுக்கு, மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படவே, ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இன்னும் பலர் தங்களின் உயிரை இழந்து வருகின்றனர்.

இதனால், பல வெளிநாடுகள், விமானங்களில், ஆக்ஸிஜன், தடுப்பு மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தன. அவற்றின் தேவை, பல மாநிலங்களில் பெரும் அவசரமாக இருந்த நேரத்தில், மோடி அரசு, சுங்கத்துறை நடவடிக்கையை விரைந்து எடுக்காமல் தாமதித்தாக செய்திகள் வெளியாகின.

மாநிலங்களுக்குத் தேவையான கொரோனா நிவாரண உபகரணங்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாய் மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட, மாநிலங்களோ அத்தகவலை வன்மையாக மறுத்தன.

இந்நிலையில்தான், கடந்த மே 3ம் தேதி நிலவரப்படி, 22,920 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், சுங்கத்துறையால் தேக்கி வைக்கப்பட்டிருந்ததாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.