ராமேஸ்வரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசிகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று மீன்பிடி படகு மூலம் 6 இலங்கை தமிழர்கள் தமிழகம் வந்துள்ளனர்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது இலங்கை. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.  இலங்கை ரூபாவிற்கு நிகரான டாலரின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உணவகங்களில் பால் தேநீர் 100 ரூபாவை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதுபோல ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது.

அதிகரித்து வரும் விலையேற்றம் காரணமாக சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அன்றாட வாழ்வை கடக்கவே போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கையில் இருந்து இன்று 6 பேர் இன்று மீன்பிடி படகுமூலம் ராமேஸ்வரம் வந்துள்ளனர். அவர்கள் இலங்கையில் அதிகரித்துள்ள விலைவாசி காரணமாக அங்கு வாழ முடியவில்லை என்று கூறுகின்றனர்.  அரிசி மற்றும் மாவு உள்பட எல்லாவற்றின் விலையும் உயர்ந்துள்ளதால் இலங்கையில் வாழ முடியாது என கூறுகின்றனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.