கொழும்பு: இலங்கை கடற்படையால் கடநத் மாதம் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்களை கொழும்பு ஊர்க்காவல் நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக  புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 91 விசைப்படகுகளில் 450 மீனவர்கள் ஜூன் மாதம் 21ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.  இவர்கள் கடலில், 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளில் இருந்த 17 மீனவர்களையும் கைது செய்ததுடன், அவர்களது விசைப்படகுகள், வலைகள், மீன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

அதுபோல,  ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 405 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது அந்தோணி பிரசாத்துக்கு சொந்தமான விசைப்படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த சந்தியா, தேவா, நடராஜன், நாகராஜன், ஜிப்ரா ஆகிய 5 மீனவர்களை கைது செய்தனர்.

கைது செய்த  22 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறைக்கு அழைத்துச் சென்று விசாரணைக்குப் பின்னர் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில்,   கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் 22 தமிழக மீனவர்களும் ஒருசில தினங்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.