சென்னை:

ரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் எளிதில் ஆங்கிலம் பேசும் வகையில், spoken english பயிற்சி அளிக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் விதமாக ஆங்கில பேச்சுத்திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், அதற்காக பயிற்சி கையேடுகள் தயாரிக்கபட்டு இருப்பதாகவும், அதன்படி, 1ம் வகுப்பு முதல்  5ம் வகுப்பிற்கு இரண்டாம் பருவத்திற்கு ஒரு கையேடும், 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு 3 பருவங்களுக்கும் சேர்த்து பாடவாரியாக 4 கையேடுகளும் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த கையேடுகளைக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்த நிலையில், ஆங்கிலப் பேச்சுத்திறன் பயிற்சி கையேட்டினையும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,

1 முதல் 5ம் வகுப்பு வரை வாரத்துக்கு 90 நிமிடத்துக்கு 2 பாடவேளையும் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது 10 நிமிடங்கள் காணொலியும், 40 நிமிடங்கள் மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சியும் நடத்த வேண்டும்.

ஆங்கிலப்பாட ஆசிரியர்கள், மாணவர்களுக்கான பயிற்சி கட்டத்தை பூர்த்தி செய்து அந்தந்த பருவ இறுதியில் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து வாங்க வேண்டும்.

6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கு வாரத்துக்கு 45 நிமிடத்துக்கான ஒரு பாடவேளையில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி அளிக்கும் வகையில் அட்டவணை தயாரிக்க வேண்டும்.

ஆங்கில பயிற்சி கற்பித்தல் வகுப்புகளை அந்தந்த மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலரான இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த ஸ்போக்கன் இங்லிஷ் கையேடுகளைக் கொண்டு,  மாணவ-மாணவிகள் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வகையில் தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்க்கும் வகையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலையில், அதை தடுக்கும் நோக்கில், அரசு பள்ளிகளிலும் ஸ்போக்கன் இங்கிலிஷ் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.  இதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.