சென்னை:

காராஷ்டிரா மாநில முதல்வராக நாளை பதவி ஏற்க உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மற்றும் அவருக்கு ஆதரவு கொடுத்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பவாருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போனில் வாழ்த்து தெரிவித்தார்.

திமுகத் தலைவரும், தமிழக  எதிர்க்கட்சித் தலைவருமான   மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள உத்தவ் தாக்கரேவையும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரையும், இன்று (27-11-2019) தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  வாழ்த்துச் செய்தியில்,  உத்தவ் தாக்கரே அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலக் கட்சியின் தலைவர் ஒருவர் முதலமைச்சராவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

எதிர்ப்பட்ட தடைகளை எல்லாம் உடைத்து வெற்றி பெற்றுள்ளீர்கள். தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவீர்கள் என நம்புகிறேன் என்று கூறி  உள்ளார்.

அதுபோல தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத் பவாருக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில்,  “மகாராஷ்டிரத்தில் நிலையான ஆட்சியை அமைத்ததற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எதிர்க்கட்சியினரின் ஒற்றுமைக்கு அடையாளமாக நீங்கள் திகழ்கிறீர்கள். ஜனநாயகம் துடிப்பாக இயங்கவும், அரசியலமைப்புச் சட்டமும் நாடும் வலிமையாக இருக்கவும் இந்த ஒற்றுமை தொடர வேண்டும்”

இவ்வாறு கூறி உள்ளார்.