சென்னை:

த்தியஅரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கையின்படி, 5, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்தியஅரசு மாநில அரசுகளை வலியுறுத்தி வரும் நிலையில், பல மாநிலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த வாரம் வரை, 5 மற்றும்  8ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படாது, அதற்கு 3 ஆண்டுகள் அவகாசம் உள்ளது என்று கூறிய வந்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தற்போது நடப்பு ஆண்டில் 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும், இதுகுறித்து  மாணவர்கள், பெற்றோர் அச்சமடைய வேண்டாம் என்று தெரிவித்து உள்ளார்.

மோடி அரசுக்கு பக்கவாத்தியம் வாசித்து வரும் எடப்பாடி தலைமையிலான தமிழகஅரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர் செங்கோட்டையனும் பாஜக அரசின் ஊதுகுழாலாக மாறிய அவலம் அம்பலமாகி உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 17ந்தேதி அன்று பெரியார் பிறந்த நாளன்று ஈரோட்டில்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,  அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை கொண்டு வந்துள்ளதாகவும்,  இந்த தேர்வில் தமிழகத்துக்கு 3 ஆண்டுகள் விதிவிலக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும்  தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று,  ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கூறி உள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவே 5, 8ம்  வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. வேறு எந்த காரணமும் அல்ல. அதே சமயம், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  பொதுத் தேர்வால் மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை. பொதுத் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். ஒரு சில பள்ளிகளில் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் இருந்தால் மட்டும் அங்கு தேர்வு நடத்த முடியாது. அருகில் இருக்கும் பள்ளிகளில் சேர்த்து தேர்வு நடைபெறும். எனவே யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதுபோல கடந்த வாரம், பள்ளிகளில் மாணவ மாணவிகள் தண்ணீர் குடிக்க இடையிடையே மணி அடித்து நேரம் ஒதுக்கப்படும் என்று கூறினார். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் குடிக்க தண்ணீரே இல்லை என்பது பரிதாபத்துக்குரிய விசயம்….

தமிழக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதாக அவ்வப்போது பேசியும், அறிவிப்பும் வெளியிட்டு வரும் அமைச்சர் செங்கோட்டையனின் பல அறிவிப்புகள் இதுவரை செயல்படுத்தப்படாமலேயே உள்ளது.

மக்களிடையே பரபரப்பையும், தன் மீதான மதிப்பை உயர்த்தும் வகையிலும் அவ்வப்போது பள்ளிக்கல்வித் சார்பில் பல்வேறு புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், பல திட்டங்கள் ஏட்டளவிலேயே இருந்து வருவதுதான் உண்மை…

பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய வெளிநாட்டு இயந்திரம் வருவதாகவும், அனைத்து பள்ளி களிலும் சுகாதாரத்தை பேணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் பலமுறை தெரிவித்துள்ள அமைச்சர், பள்ளிகளில் தண்ணீர் இருக்கிறதா என்பதை என்றைக்காவது நேரில் சென்று ஆய்வு நடத்தியிருப்பாரா?

பெரும்பாலான நாட்கள் சென்னையிலேயே முகாமிட்டுக்கும் கல்வி அமைச்சர், இங்குள்ள  அரசு பள்ளி களுக்கும் திடீரென்று சென்று சோதனை நடத்தினால், பள்ளிகள் எவ்வாறு செயல்படுகிறது, ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள்… தலைமை ஆசிரியர்கள் பள்ளியில் உள்ளனரா அல்லது, மீட்டிங் என்று கூறி எஸ்கேப் ஆகி உள்ளார்களா என்பதை கண்டு பிடிக்கலாம்….

அதுபோல மாணவர்கள் குடிக்க தண்ணீர் இருக்கிறதா, அவர்கள் உபயோகப்படுத்தும் கழிவறைகள் எப்படி உள்ளது, சத்துணவு எந்த இடத்தில் என்ன தண்ணீரில் தயார் செய்யப்படுகிறது, பள்ளிகளின் நிர்வாக செலவுகளுக்காக அரசு வழங்கும் மானியம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை நேரில் சென்று பார்க்காமல், யாரோ ஒரு அதிகாரி கூறுவதை சிரமேற்கொண்டு, கிளிப்பிள்ளைப் போல பேசி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது…

அதுபோலத்தான் தற்போதும், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கூறியிருப்பதும்….

தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசுவதை குறைத்து விட்டு, நேரடி செயலில் இறங்கினால் மட்டுமே பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் உயரும், பள்ளிகளும் சீர்படும், அங்கு படிக்கும் குழந்தைகளின் வாழ்வும் சிறக்கும்… 

நடவடிக்கையில் இறங்குவாரா அமைச்சர்… பொறுத்திருந்து பார்ப்போம்…