டெல்லி: உ.பி.யில்  உள்ள ராமர்கோவிலுக்கு செல்லும் வகையில் இந்தியன் ரயில்வே நாடு முழுவதும் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்தும்  அயோத்திக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 இந்தியாவின் சிறப்பு மிக்க அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.  இந்த நிகழ்வில் 3 ஆயிரம் விவிஐபிகள் உள்ளிட்ட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் நாள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி முதல் அனைத்து தரப்பினரும் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, வரும் 23ந்தேதி முதல் பொங்கல் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் அயோத்தி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக  நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் அறிக்கப்பட்டு உள்ளது. அயோத்தி சென்று விட்டு அப்படியே காசிக்கும் சென்று வழிபடலாம். இரண்டு நகரங்களுக்கும் இடையிலான தொலைவு என்பது 219 கிலோமீட்டர் தூரம் தான். அதன்படி,  தமிழகத்தில் இருந்து அயோத்தி சென்று ராமர் கோயிலில் வழிபட விரும்பும் பக்தர்களுக்கு வசதியாக இந்திய ரயில்வே  சிறப்பு ரயில்களை அறிமுகம் செய்யவுள்ளது.

அயோத்திக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் வசதிக்காக இந்திய ரயில்வே 66 நகரங்களில் இருந்து  ஆஸ்தா சிறப்பு ரயில்களை  அறிமுகம் செய்துள்ளது.  66 நகரங் களில் இருந்து 66 ரயில்கள் அயோத்திக்கு பயணிக்க உள்ளன. இதற்கான முன்பதிவு வசதி ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

இந்த பயணம் வரும் ஜனவரி 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு ரயிலும் 22 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். ஆஸ்தா சிறப்பு ரயில்கள் பயணிகளின் டிக்கெட் முன்பதிவை பொறுத்து கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வாய்ப்புள்ளது.  டிக்கெட்களை பொறுத்தவரை அயோத்திக்கு செல்லவும், மீண்டும் சொந்த ஊர் திரும்பவும் சேர்த்து ரவுண்ட் டிரிப்பிற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களில் இருந்து ஆஸ்தா சிறப்பு ரயில்கள் அயோத்திக்கு இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளது.

டெல்லியை பொறுத்தவரை நியூ டெல்லி, பழைய டெல்லி, நிஜாமுதீன், ஆனந்த் விகார் ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் இருந்து ஆஸ்தா சிறப்பு ரயில்கள் புறப்படுகின்றன.

மேலும் அகர்தலா, தின்சுகியா, பார்மெர், கத்ரா, ஜம்மு, நாசிக், டேராடூன், பத்ராக், குர்தா ரோடு, கோட்டயம், செகந்திராபாத், ஹைதராபாத், காஸிபேட் ஆகிய நகரங்களில் இருந்து ஆஸ்தா சிறப்பு ரயில்கள் அயோத்தி நகருக்கு இயக்கப்படவுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர், புனே, மும்பை, வர்தா, ஜால்னா, நாசி உள்ளிட்ட 7 ரயில் நிலையங்களில் இருந்து ஆஸ்தா சிறப்பு ரயில்கள் புறப்படுகின்றன.

ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு அடுத்த சில நாட்களில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் பார்த்தால் ஆஸ்தா சிறப்பு ரயில்கள் முன்பதிவு குறித்த விவரங்களை பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

22ந்தேதி ராமர்கோவில் கும்பாபிஷேகம் – 23ந்தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி