சென்னை:  போலி ஆவணங்கள் தயாரித்தவர்களை இடைநீக்கம் செய்ததால்,  தன்மீது அவதூறாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அதனால், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட  பெரியார் பல்கலைகழக துணைவேந்தர்  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பல்கலைகழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, சொந்தமாக பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் (PUTER Foundation) என்ற அமைப்பை தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த நிறுவனத்தை செயல்படச் செய்ததாக, பல்கலைகழகத்தின் ஊழியர் சங்கத்தினர் (PUEU) காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். அதேபோல ஜாதிப்பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கிருஷ்ணவேணி, சக்திவேல் ஆகியோரும் துணைவேந்தருக்கு எதிராக புகார் அளித்திருந்தனர்.

இந்த புகார்களின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து ஜெகநாதனை கைது செய்ததுடன், பெரியார் பல்கலைக்கழகத்திற்குள்ளும் புகுந்து சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை எடுத்துச்சென்றனர். இதற்கிடையில் ஜெகநாதன் இடைக்கால ஜாமின் பெற்று, இருதய சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர் ரவி சந்தித்து பேசியதுடன், பெரியார் பல்கலைக்கழக பிரச்சினை குறித்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில்,  துணைவேந்தர் ஜெகநாதனுக்கு  சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய  இடைக்கால ஜாமீன் ரத்து செய்யக் கோரி, சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த  மனு வரும் வெள்ளிக்கிழமை(ஜனவரி 19) விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகன்நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில்,  தனது நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியதுடன், பெரியார் பல்கலைக்கழக  துணைவேந்தராக 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றபோது நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் இருந்தததாகவும், அவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ள்ளார். மேலும்,  அங்கு செயல்பட்டு வந்த  தொலைதூரக் கல்வி பிரிவில் போலி ஆவணங்கள் தயாரிப்பில் சிலர் ஈடுபட்டு வந்ததை கண்டறிந்து, அவர்களை  இடைநீக்கம் மற்றும் பணிநீக்கம் செய்ததால்  அவர்கள் தன்னை மிரட்டியதுடன்,  தனது உயிருக்கு அச்சுறுத்தலையும்  உருவாக்கி வருகின்றனர். ஆனால், அதைமீறி செயல்பட்டுக்கொண்டிருப்பதாகவும், தன்மீது அரசு அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், அரசின் அனுமதி இல்லாமல் ஓர் அமைப்பை (PUTER FOUNDATION) தொடங்கியதாக கூறுவது தவறு என்றும், அரசு துறைகளிடம் உரிய அனுமதியை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றின் பின்னணியில் தனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் கீழ், தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றில் பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும்  கோரிக்கை வைத்துள்ளார்.  இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு  நாளை  (வியாழக்கிழமை ஜனவரி 18) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.