மதுரை:  புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை  அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தென்மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கமாகும். இந்த ஆண்டு பொங்கலையொட்டி, மதுரையின் பிரபலமான அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், இன்று உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

முன்னதாக இன்றைய போட்டியை தமிழ்நாடு விளையாட்டுத்துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இன்றைய போட்டி மாலை 5மணி வரை நடைபெறும். இதில்,   1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.  இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக தமிழக முதலமைச்சர் வழங்கும் காரும், சிறந்த காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் மற்றொரு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதுபோக மோட்டார் சைக்கிள், தங்ககாசு, அண்டா, மிக்சி, சைக்கிள், டி.வி, மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளன. ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி,. பாதுகாப்பு பணிக்கு சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.