சென்னை: சட்டமன்றத் தேர்தலை ஒட்டி சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை மதியம்  சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு  ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்  நாளை மறுதினம், அதாவது  ஏப்ரல் 23ந்தேதி நடைபெறுகிறது.. அதற்கான ஏற்பாடுகளை  தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.  தேர்தல் காரணமாக தமிழ்நாட்டில்  அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.  ஆளும் கட்சியான தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கூட்டணி பலத்தை அதிகரித்துள்ளதுடன்,  கவர்ச்சிகரமான அறிவிப்புகளை  வெளியிட்டுள்ளது.

மாற்றாக ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கி உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும், தவெகவும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அதிரடி கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.. இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி  எப்போதும் போல தனித்து களமிறங்குவதுடன் அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால்  4 முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைவதால், நகர்ப்புறங்களில் பணி நிமித்தமாக தங்கியிருக்கும் வாக்காளர்கள் சொந்த ஊர் சென்று வாக்களிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

இந்த நிலையில், தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இயக்குவதாக அறிவித்துள்ளது. நாளை (22ந்தேதி) மதியம்  1.25 மணிக்கு சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு, தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக நள்ளிரவு 2.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]