சென்னை:  மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தேர்தல் நாளில் வாக்களிக்க செல்லும்போது,   அரச பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வாக்குப்பதிவு நடைபெறும் 23-ம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள், தங்களது வாக்குகளை பதிவு செய்ய மாநகர போக்குவரத்து கழக சாதாரண கட்டணப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 23ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் நாளில் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யவும், மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகை வழங்கும் விதமாகவும் மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

‘தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் நாள் அன்று மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய மாநகர போக்குவரத்து கழக சாதாரண கட்டண பேருந்துகளில் பயணம் செய்யும்போது கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

60 வயதிற்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்கள் வாக்குகளை பதிவு செய்ய, மாநகர போக்குவரத்து கழக சாதாரண கட்டண பேருந்துகளில் மட்டும் பயணம் செய்யும்போது ஏதேனும் வயது சான்று மற்றும் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து, மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்களை அளிக்காமல், கட்டணமில்லா பயணச்சீட்டினை நடத்துநரிடம் பெற்று பயணம் செய்யலாம்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் வாக்குகளை பதிவு செய்ய மாநகர் போக்குவரத்து கழக சாதாரண கட்டண பேருந்தில் பயணம் செய்தால் அவர்கள் UDID Card மற்றும் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பயணச்சீட்டினை பெற்று பயணம் செய்யலாம்.

தேர்தல் நாள் 23.4.2026 அன்று ஒரு நாள் மட்டுமே இச்சலுகையில் பயணம் செய்யலாம்’ .

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]