புத்தி, சுரண்டுவது… கனவு, சி.எம் பதவி..

Must read

 

சிறப்புக் கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன்

ரெண்டுங்கட்டான் என்பார்களே, அப்படியொரு இக்கட்டில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா உலகம்.. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏராளமான படங்கள் தயாராகின்றன. சில லட்சம்பேருக்கு வாழ்வாதாரமாகவும் திகழ்கின்றன…
ஆனால் உற்சாகக்குரல்களுக்கு பதிலாய், ஒப்பாரிதான் கேட்கிறது. அதாவது பேரு பெத்த பேரு, தாக நீளு லேது மொமெண்ட் இது..எங்கே சறுக்கினார்கள் ?
பத்தாண்டுகளுக்கு முன்பு ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்த சிவாஜி படம் உருவானது.. ஷங்கரின் இயக்கத்தில் திட்டமிட்டதைவிட பட்ஜெட் தாறுமாறாக எகிறியது. சகல வசதிகளையும் பெற்றிருந்து படத்தை கச்சிதமாக முடித்து வெளியிடும் ஆனானப்பட்ட ஏவிஎம் நிறுவனமே அரண்டுபோனது.
வாங்கிய விநியோகஸ்தர் தரப்புக்கோ, பெரிய அளவில் வசூல் தேறினால் மட்டுமே கொஞ்சமாவது கரையேற முடியும் என்ற நிலைமை.. விளைவு? படத்தை ஒரே நேரத்தில் பல நூறு தியேட்டர்களில் திரையிடுவது.. சந்தோஷத்தில் மிதக்கும் ரசிகர்களிடமிருந்து முடிந்தவரை எவ்வளவு அதிகமாக பிடுங்கிவிட முடியுமோ அவ்வளவு பிடுங்க முதல் வாரத்திலேயே திட்டம் உருவானது..இதை அவர்கள் பாஷையில் மார்க்கெட்டிங் என்பார்கள்..
எதிர்பார்த்த மாதிரியே முதல் நாள் காட்சி, இரண்டாம் காட்சி, முடியாதவர்களுக்க முதல் நாள் என விதவிதமான கேட்டகிரி மனநிலையில் ரசிகர்கள் பார்த்து தள்ளினார்கள். சிறிய நகரங்களில்கூட சர்வ சாதாரணமாக டிக்கெட் விலை 300, 400 என போனது..
சூப்பர் ஸ்டாரும் பிரமாண்ட டைரக்டரும் கை கோர்த்ததால் வந்த திருப்பம் இது.. சிவாஜி,எந்த அளவுக்கு லாபத்தை அள்ளித்தந்தது என்பது படத்தை வாங்கியவர்களுக்கே வெளிச்சம்..
ஆனால் அதிக தியேட்டர்கள், புயல்வேக கலெக்சன் என்ற டிரெண்ட் அடங்கவில்லை.. கமலின் தசாவாதரம் படமும் இறங்கியது.. விஜய், அஜித் போன்றவர்களும் சும்மா இருப்பார்களா? அவர்களின் படங்களும் இறங்கின.. ரெண்டாவது மூன்றாவது நாளிலேயே வெற்றி விழா கொண்டாட்டங்கள் என இன்னொரு பக்கம் சைடு பில்டப் நிகழ்ச்சிகளும் அரங்கேற ஆரம்பித்தன..
ரசிகன் பல தடவை பார்த்துப்பார்த்த ரசித்ததும் 100 நாள், 175 நாள் வெள்ளி விழா என்பதெல்லாம் கழட்டி வீசப்பட்டன. மூன்று நாள் கலெக்சனே குறியாகிப்போயின..

ஒரு துறையில் வர்த்தக முன்னேற்றம், விரிவாக்கம் போன்றவை கால ஓட்டத்தில் தவிர்க்க முடியாது என்பது உண்மையே.. இங்கேதான் இரண்டு விதமான பிரச்சினைகள் உருவாகின.
பெரிய நடிகர்கள் படங்கள் மட்டும் பெரும்பான்மை தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் மற்றவர்களின் படங்களுக்கு தியேட்டர்களை ஒதுக்குவது என்பது ஏதோ பிச்சை போடுகிறமாதிரிய ஒரு முறை உருவானது.. அதில் சிக்குண்டு வெளியே வரமுடியாமல் கதையம்சம் கொண்ட சிறிய பட்ஜெட் படங்கள் இன்றளவும் செத்து சின்னா பின்னமாகிக்கொண்டிருக்கிறன..
இன்னொரு பிரச்சினை, படங்கள் பிரமாண்டமாக தயாராவதாலேயே போட்ட முதலை எப்படி எடுப்பது என்ற திட்டமிடல்களால் உருவான, மூளைக்கசக்கல்..
பாடல் உரிமை, வெளிநாட்டு உரிமை, டிவி ரைட்ஸ் உரிமை, மேக்கிங், பிரமோஷன், இசை வெளியீட்டு விழா என சகலத்திலும் வித்தையை காட்டினால் பைசா தேறும் என்று கட்டாய நிலைமை..
அதாவது தங்கள் இஷ்டத்திற்கும் பண்டத்தை செய்துவிட்டு அதை விற்றே தீரவேண்டும் என்று மற்றவர்கள் தலையில் அநியாய விலையில் கட்டுவது.
ஒரு படைப்பு, கதைக்களத்திற்காக இவ்வளவு செலவு செய்தால்தான் உருவாகும் என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.. ஆனால் இங்கே நடப்பதோ விநோதம்.
உலகம் முழுவதும் சந்தையுள்ள ஹாலிவுட் படங்களில் இருவகை உண்டு.. ஒன்று ஜுராசிக் பார்க், அவதார், டைட்டானிக் போன்ற படங்கள் பெரும் பொருட்செலவில் தயாரானவை.. ஆனால் அந்த படத்தின் ஹீரோ, ஹீரோயின்களுக்கு பெரிய சம்பளமே இருக்காது..
இன்னொரு ரகம், ஆர்னால்ட், டாம் குரூஸ் போன்ற அதிக சம்பளம் வாங்கும் டாப் ஹீரோக்களை வைத்து படம் எடுப்பது.. ஆனாலும் அவர்களின் சம்பளம் என்பது மொத்த படத்தின் மொத்த பட்ஜெட்டில் அதிகபட்சம் இருபது சதவீதத்தைக்கூட தாண்டாது..
ஆனால் நமது தமிழ் சினிமாவில் இதற்கு நேர்மாறாக இருக்கும். நம்ம டாப் ஹீரோகளுக்கு மொத்த பட்ஜெட்டில் பாதிக்கு மேல் தொடங்கி முக்கால்வாசிவரை சம்பளமாக போகும்…. மீதி இருப்பதில்தான் மற்றவர்களின் சம்பளம் உள்பட அனைத்து தயாரிப்பு செலவுகளும்..
ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோரின் படங்களில் அவர்களுடைய சம்பளம்தானே பெரும் செலவு. இன்னொரு காமடியான விஷயம்..இப்படிப்பட்ட டாப் ஹீரோக்களை வைத்து படம் எடுத்தால் எல்லா காட்சிகளிலும் பிரமாண்டம் தெரியவேண்டும் என்று இவர்களுக்கு யார் தான் உத்தரவுபோட்டார்கள் என்றே தெரியவில்லை.
இங்கே சிந்திக்கவேண்டியவர்கள் டாப் ஹீரோக்கள்தான். படத்துக்கு படம் சம்பளத்தையும் ஏற்றி பிரமாண்டங்களையும் கூட்டிக்கொண்டே போகவேண்டும் என்று இவர்கள் அடம்பிடிப்பது ஆரோக்கியமான செயலா?
வசூல் சக்ரவர்த்தி எம்ஜிஆரின் திரையுல பயணத்தை உற்றுப்பார்த்தால் ஒரு விஷயம் நன்கு விளங்கும்.. அவருக்கென ஆஸ்தான நடிகைகள், இயக்குநர்கள் இருப்பார்கள். ஆனால் தயாரிப்பாளர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். எளிமையான மனிதர் சின்னப்பா தேவர், டி.ஆர் ராமண்ணா ஆகிய இருவருக்கு மட்டுமே விதிவிலக்காக தொடர்ந்து தயாரிப்பாளர் வாய்ப்பை கொடுத்தார்..
ஜெமினி, ஏவிஎம், விஜயா வாகினி போன்ற ஜாம்பவான் நிறுவனங்களுக்கெல்லாம் ஓரிரு படங்கள்தான் செய்தார். மற்றபடி எம்ஜிஆரின் படத் தயாரிப்பாளர்களெல்லாம் சாமான்யர்களும், சக சினிமா தொழிலாளர்களே..
ஒரு பிரமாண்டமான படத்தை கொடுத்தால், அடுத்த படத்தில் அதைவிட மிகமிக அதிக சம்பளம், மேலும் பிரமாண்டம் வைத்தே ஆகவேண்டும் என்றெல்லாம் எம்ஜிஆர் நிபந்தனை போட்டதே கிடையாது..
எங்க வீட்டு பிள்ளை என்கிற பிரமாண்ட படம் கலரில் வெளியாகும்..அடுத்து கறுப்பு வெள்ளை லோ பட்ஜெட்டில் தயாரான பணம் படைத்தவன் வெளியாகும்..அடுத்து பிரமாண்டமாய் ஆயிரத்தில் ஒருவன் என கலரில் வெளியாகும். உடனேயே கலங்கரை விளக்கம் என கறுப்புவெள்ளை படம் வரும்.
ஒவ்வொருத்தரின் சக்திக்கேற்ப சம்பளம் பெற்று நடித்து கொடுத்தவர் எம்ஜிஆர். பிரமாண்டமான கலர் படங்கள் வசூலை வாரிக்குவித்ததால் கலர் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்ததில்லை..
அடிமைப்பெண், நம்நாடு போன்ற படங்கள் வெளியாகி சக்கைபோட்டபிறகும், தலைவன், ஒருதாய் மக்கள், அன்னமிட்டகை என இன்னொரு பக்கம் லோ பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்காக கறுப்பு வெள்ளை படங்களை நடித்து கொடுத்தபடிதான் இருந்தார். அனைத்து தரப்பையும் அவர் வாழவைத்தார்.. அதனால்தான் எம்ஜிஆரின் சுமாரான படங்கள்கூட மற்றவர்களின் மகத்தான வெற்றிப்படங்களின் வசூலுக்கு ஈடுகொடுத்தது.
நடிகர் திலகம் சிவாஜியும் இப்படித்தான். 50 களிலும் 60களிலும் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்த அவர் 70களிலும் நிதானமாகவே பயணித்தார்.. 1972ல் ராஜா, நீதி, பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை, ஞான ஒளி, தர்மம் எங்கே தவப்புதல்வன் என்று ஏழு படங்கள் கொடுத்தார். தர்மம் எங்கே மட்டுமே சரியாக போகவில்லை.. வசந்த மாளிகையும் பட்டிக்காடா பட்டணமாவும் வெள்ளி விழா கொண்டாடின, மற்ற படங்கள் 100 நாட்களை கடந்தன..
ஒரே ஆண்டில் ஆறு வெற்றிப்படங்கள் கொடுத்தேன் என்று அடியோடு மாறிவிடவில்லை.. வசந்த மாளிகை போன்ற பிரமாண்டங்கள்தான் வேண்டும் என்று அதையே பிடித்து தொங்கிக்கொண்டிருக்கவில்லை. லோ பட்ஜெட்டில் பொன்னூஞ்சல் போன்ற கறுப்பு வெள்ளை படத்தை கொடுத்து வெற்றியாய் பேசவைத்தார்..
அன்றைய இரு திலகங்களுமே தாங்களும் வாழ வேண்டும் தங்களை சார்ந்த எல்லோரும் வாழ வேண்டும் என்ற நினைப்புடனேயே தொழில் செய்தார்கள்.. தான் மட்டுமே மொத்தமாய் கொண்டுபோய்விடவேண்டும் என்று அவர்கள் கருதவில்லை..
பெரிய நடிகர்கள் சிறிய தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து வாழ வைத்தார்கள்….பெரிய பெரிய நிறுவனங்களோ பெரும்பாலும், சிறிய நடிகர்களையே வைத்து படம் எடுத்து வெற்றியை தந்து அவர்களை வாழவைத்தன.. அவர்கள் அனைவரையும் சேர்த்து புன்முறுவலோடு தமிழக ரசிகர்கள் வாழவைத்தனர்.
ஆனால் இன்றைக்கு.. உயிர் ரசிகனாக இருந்தாலும் கொள்ளை விலையில் டிக்கெட் வாங்கினால்தான் என் தரிசனம் என்கிறது ரஜினி, விஜய் வகையறாக்களின் தேவையே இல்லாத பட்ஜெட்டுகள்.. தான் வாங்கும் உபரி பணம் யார் தலையில் போய் விழும் என்று தெரியாத முட்டாள்களா இவர்கள்..?
முதலமைச்சர் கனவில் மிதக்கும் முன்னணி நடிகர்களின் சம்பள பேராசை, பிரமாண்ட வெறி ஆகிய இரண்டும் விலகும் வரை, தமிழ் சினிமா உலகம் மீள வழியில்லை..

More articles

Latest article