சென்னை

இன்று முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கும் கலைஞர் நினைவிடத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

இன்று மாலை 7 மணிக்கு சென்னை மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.  இந்த கலைஞர் நினைவிடத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் பின் வருமாறு

மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்துக்கு உள்ளே சென்றவுடன் இளங்கோவடிகள், கம்பர் சிலைகள் நம்மை வரவேற்பது போன்று அமைந்துள்ளன. இந்த சிலைகள் அருகே அண்ணா அமர்ந்து புத்தகம் படிப்பது போன்ற வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. அண்ணா சமாதிக்கு பின்னால் கருணாநிதி நினைவிடம் அமைந்துள்ளது. கருணாநிதி அமர்ந்து எழுதுவது போன்ற வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

கருணாநிதியின் சமாதியில் ‘ஓய்வு இல்லாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’ என்ற வாசகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. தனது மறைவுக்கு பின்னர் இந்த வாசகத்தை தனது சமாதியில் எழுத வேண்டும் என்று கருணாநிதி முன்கூட்டியே சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றதற்காக கருணாநிதியை பாராட்டி சோனியாகாந்தி கடந்த 8.11.2005 அன்று எழுதிய கடிதம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டு அவரது நினைவிடம் அருகே வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை தனது நினைவிடத்தில் வைக்க வேண்டும் என்று கருணாநிதி சுட்டிக்காட்டிய கடிதத்தின் கல்வெட்டும் அதன் அருகே வைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தை சுற்றிலும் கருணாநிதியின் பொன்மொழி வாசகங்களை கல்வெட்டுகள் தாங்கி நிற்கின்றன.

அவரது சமாதியின் பின்புறம் வியட்நாம் நாட்டின் மார்பிள் கல்லில் அவருடைய உருவம் பிரமாண்டமாக பொறிக்கப்பட்டுள்ளது. இது உதயசூரியன் வடிவமைப்பை கொண்டுள்ளது. பகல் நேரத்தில் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் கருணாநிதியின் இந்த தோற்றம் இரவு நேரத்தில் ‘லேசர்’ மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் நவீன வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருணாநிதி சமாதியை சுற்றி பார்த்தவுடன், 20 ஆயிரம் சதுரடியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் உலகம்’ என்ற டிஜிட்டல் அருங்காட்சியகத்துக்கான சுரங்கப்பாதை அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் உள்ளே நுழைந்ததும் குளுகுளு ஏ.சி. காற்று மனதை வருடுகிறது. கருணாநிதி எழுதிய புத்தகங்களின் பெயர்கள் ‘க’ என்ற ஒற்றை எழுத்தில் உள்ளடக்கி பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த எழுத்துதான் ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகத்தின் இலச்சினை ஆகும்.

‘கலைஞர் எழிலோவியங்கள்’ என்ற பெயரில் அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை கருணாநிதியின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன. இதில் கருணாநிதியின் இறுதிப்பயண புகைப்படங்களும், ‘அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உருக்கமான கடிதமும் இடம் பெற்றுள்ளது. இது மனதை கலங்க வைக்கின்றன.

‘உரிமை வீரர் கலைஞர்’ என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்குள் நுழைந்தால் ஆச்சரியம் காத்திருக்கிறது. சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றிடும் உரிமையை பெற்று தந்து சென்னை கோட்டையில் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காட்சி அமைப்பு ‘3 டி’ தொழில்நுட்பத்துடன் இடம் பெற்றுள்ளது. கம்பீரமாக நின்றபடி தனது குரலில் கருணாநிதியே பேசுவது போன்ற வியப்பு ஏற்படுகிறது.

‘கலைஞருடன் ஒரு செல்பி’ என்ற பெயரில் ஒரு அரங்கு அமைந்துள்ளது. இங்கு கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அமர்ந்திருக்கும் தோற்றம் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். புகைப்படத்தை எடுத்தவுடன் ‘டிஜிட்டல்’ தொடு திரையில் செல்போன் எண்ணை பதிவு செய்தால் அந்த புகைப்படம் சட்டென்று ‘வாட்ஸ்-அப்’ எண்ணுக்கு வந்து விடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

‘கலைஞரின் சிந்தனை’ சிதறல்கள் என்ற பெயரில் பிரமாண்ட அறை ஒன்றும் அமைந்துள்ளது. இதில் ‘ஏ.வி.’ தொழில்நுட்பத்தில் கருணாநிதி பேசுவது போன்று காட்சி அமைப்புகள் இருக்கின்றன. ‘புதிரை வெல் கலைஞர் வழி செல்’ என்ற தலைப்பில் கருணாநிதி பற்றிய கேள்விகள் தொடு திரையில் வருகின்றன. சரியான பதிலை சொல்பவர்களை கருணாநிதியே பாராட்டுவது போன்று குரல் ஒலிக்கிறது. கருணாநிதி எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’ உள்பட 8 புத்தகங்களின் தலைப்புகளுடன் ‘டிஜிட்டல்’ திரை வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த புத்தகத்தை தொட்டாலும், அந்த புத்தகம் பற்றிய விளக்கம் வீடியோவாக தோன்றுகிறது. இந்த அறையில் 9¼ அடி உயரத்தில் கருணாநிதியின் மெழுகு உருவச்சிலையும் அமைய இருக்கிறது.

‘கலையும், அரசியலும்’ என்ற தலைப்பில் 79 பேர் அமரும் வகையில் மினி தியேட்டரும் உருவாக்கப்பட்டுள்ளது. 60 அடியில் திரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கருணாநிதி வாழ்க்கை வரலாறு 20 நிமிடங்கள் குறும்படமாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

கருணாநிதி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திருவள்ளுவர் சிலை, வள்ளுவர்கோட்டம், அண்ணா மேம்பாலம் போன்ற திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் அருங்காட்சியகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் செல்லும் பாதைகளில் பளிச்சிடுகின்றன. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து மெரினா கடற்கரையின் அழகை ரசிக்கும் வகையில் பூங்கா போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.